கொல்கத்தாவில் மாநில எதிர்க்கட்சிகள் நடத்திய பொதுக்கூட்டம் குறித்தும் அதில் திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்றது குறித்தும் அரசியல் கட்சியினர் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
மக்களவைத் தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு வரும் மார்ச் மாதம் முதல் வாரத்தில் வெளியாகும் என தகவல் கிடைத்துள்ளது. இதனால் தேசிய கட்சிகள் கூட்டணிகள் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
இதைத்தொடர்ந்து மேற்கு வங்க முதலமைச்சரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தலைமையில் கொல்கத்தாவின் பிரிகேட் பேரேடு மைதானத்தில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளில் தலைவர்கள் பங்கேற்றனர்.
இதுகுறித்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், தேர்தல் கூட்டணியில் அதிமுகதான் தலைமை ஏற்கும் எனவும் அதில் எந்த மாற்றமும் இல்லை எனவும் தெரிவித்தார். கட்சியின் அடையாளத்தை எந்த நிலையிலும் விட்டுக்கொடுக்க மாட்டோம் எனவும் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழியில் கட்டிக்காப்போம் எனவும் குறிப்பிட்டார்.
ஸ்டாலினை பொறுத்தவரை திக்குத் தெரியாத காட்டில் தவித்து வருகிறார் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கே.பாலகிருஷ்ணன் கூறுகையில், மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியை சிபிஎம் எதிர்ப்பதாகவும் மம்தா பானர்ஜி அரசாங்கம் அராஜகமான ஆட்சி நடத்தி வருவதாகவும் தெரிவித்தார்.
நாடு முழுவதும் பாஜகவை வீழ்த்துவோம் நாட்டை பாதுகாப்போம்; மேற்குவங்கத்தை பொறுத்தவரை மம்தாவை வீழ்த்துவோம் மேற்கு வங்கத்தை பாதுகாப்போம் என்ற அடிப்படையில் தான் சிபிஎம் உள்ளது என தெரிவித்தார்.
மம்தா பானர்ஜி தேசிய தலைவராகுவதற்கு எடுக்கும் சில முயற்சிகளை தடுக்க முடியாது எனவும் அதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் போவது பெரிய பிரச்னை ஒன்றும் இல்லை எனவும் கே. பாலகிருஷ்ணன் குறிப்பிட்டார்.
இதுகுறித்து விசிக தலைவர் திருமாவளவன் கூறுகையில், மம்தா பானர்ஜியின் முயற்சி வரவேற்கத்தக்கது எனவும் இதனால் பாஜகவை எதிர்ப்பதில் எந்தச் சிக்கலும் ஏற்படாது என தான் நம்புவதாகவும் தெரிவித்தார்.
மூன்றாவது அணி அமைய வாய்ப்பில்லை எனவும் அதற்கான சூழல் அமையாது எனவும் திருமாவளவன் தெரிவித்தார்.