இந்தியா

வெளியானது 10ம் வகுப்பு தேர்வு முடிவு: தந்தை மகனுக்கு காத்திருந்த அதிர்ச்சி செய்தி!

JananiGovindhan

கொரோனா காரணமாக இரண்டு ஆண்டுகளாக தடைப்பட்டு போன அனைத்து பொதுத்தேர்வுகளையும் மகாராஷ்டிர அரசு நடத்தி முடித்து, கடந்த ஜுன் 17ம் தேதியன்று முடிவுகளையும் வெளியிட்டது. 

அதில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில முழுவதும் 96.94 சதவிகிதம் பேர் தேர்ச்சி அடைந்ததாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படி இருக்கையில், பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய தந்தை மகன் இருவரில் மகன் தோல்வியுற்றும், தந்தை பாஸ் ஆகியிருக்கும் நிகழ்வு புனே மாவட்டத்தில் அரங்கேறியிருக்கிறது. புனேவின் பாபாசாஹிப் அம்பேத்கர் தியாஸ் பிளாட் பகுதியைச் சேர்ந்தவர் 43 வயதான பாஸ்கர் வாக்மரே. இவர் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு குடும்ப சூழல் காரணமாக தன்னுடைய பள்ளிப்படிப்பை 7ம் வகுப்போடு நிறுத்தி, பணியில் சேர்ந்தார்.

பின்னர் திருமணம், பிள்ளைகள் என குடும்பம் பெறுகியதால் பாஸ்கரால் தன்னுடைய படிப்பை தொடர முடியாமல் போயிருக்கிறது. இருப்பினும் எப்படியாவது படித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தை மட்டும் அவர் கைவிடவில்லை.

தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் பாஸ்கர் வாக்மரே நடப்பாண்டு தன்னுடைய மகனுக்கும் பத்தாம் வகுப்பு தேர்வு என்பதால் அவரோடு சேர்ந்து படித்து தேர்வையும் எழுதியிருக்கிறார். இதில் பாஸ்கர் தேர்வில் வெற்றியை பெற்றிருக்கிறார். அவரது மகன் 2 பாடங்களில் ஃபெயில் ஆகியிருக்கிறார். இது ஒரு புறம் பாஸ்கருக்கும் அவரது குடும்பத்துக்கும் சந்தோஷத்தை கொடுத்தாலும், மகன் தேர்வில் தோல்வி அடைந்தது வருத்தத்தையே ஏற்படுத்தியிருக்கிறது.

இருப்பினும், மகனின் துணைத்தேர்வுக்காக நாங்கள் உறுதுணையாக இருப்போம். கண்டிப்பாக அவர் தன்னுடைய துணைத்தேர்வில் வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கை உள்ளது என பாஸ்கர் வாக்மரே கூறியுள்ளார். இதேபோல பாஸ்கரின் மகன் சஹிலும், தன்னுடைய அப்பாவின் தேர்வு முடிவு மகிழ்ச்சியளிக்கிறது. என்னுடைய துணைத்தேர்வுக்கு தயாராகி வெற்றி பெறுவேன் எனத் தெரிவித்துள்ளார்.

ALSO READ: