காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலுக்கு இலங்கை, நேபாள பிரதமர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஜம்மு- காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை வாகனங்கள் மீது நடத்தப்பட்ட தற்கொலைப்படைத் தாக்குதலில் 40 வீரர்கள் உயிரிழந்துள்ளனர். சி.ஆர்.பி.எப். வீரர்கள் மீதான தாக்குதலுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரில் நடந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதல் கண்டனத்திற்குரியது என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கூறியுள்ளார். மேலும், பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு அவர் இரங்கல் தெரிவித்தார். அதேபோல், பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு நேபாள பிரதமர் கே.பி.ஷர்மா ஒலியும் கண்டனம் தெரிவித்துள்ளார். வீரர்கள் உயிரிழப்புக்கு பிரதமர் நரேந்திர மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, சிஆர்பிஎப் வீரர்கள் மீது தாக்குதல் நடந்துள்ள நிலையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை நாளை காலை 9.15க்கு கூடுகிறது. இதில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை செய்யப்படும். பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுக்கும் வரை நாங்கள் ஓயமாட்டோம் என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத் கூறியுள்ளார்.