இந்தியா

பிஷப்புக்கு எதிராக போராடிய கேரள கன்னியாஸ்திரி வெளியேற உத்தரவு!

webteam

கேரளாவில் பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான பிஷப்புக்கு எதிராக போராடிய கன்னியாஸ் திரி லூசி, திருச்சபையில் இருந்து வெளியேற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. 

கேரளாவை சேர்ந்த முன்னாள் பிஷப் ஃபிராங்கோ முல்லக்கல், கன்னியாஸ்திரி ஒருவரை பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி யிருந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இது சர்ச்சையாக உருவெடுத்த நிலையில் ஃபிராங்கோ கைது செய்யப்பட்டு பின் ஜாமினில் விடுவிக்கப் பட்டார். இந்த வழக்கின் விசாரணை நடந்து வருகிறது.

முன்னதாக ஃபிராங்கோவை கைது செய்யக்கோரி கன்னியாஸ்திரிகள் பலர் போராட்டம் நடத்தினர். இதில் செயின்ட் மேரி தேவாலயத்தை சேர்ந்த கன்னியாஸ்திரி லூசியும் பங்கேற்றார். இதன் காரணமாக அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவர் தேவாலயப் பணி களில் ஈடுபடக் கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதனையடுத்து அவருக்கு ஆதரவாக ஏராளமானோர் திருச்சபையில் கூடினர்.  இந்த நடவடிக்கை எடுக்க என்ன காரணம் என்பதை திருச்சபை பாதிரியார் விளக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். பின்னர் பாதிரியார் ஸ்டீபன் தலைமையில் திருச்சபை ஊழியர்களின் பொதுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்குப்பின் பேசிய பாதிரியார், சிஸ்டர் லூசி மீதான நடவடிக்கை திரும்பப் பெறப்படுவதாகத் தெரிவித்தார்.  இதையடுத்து கேரள அரசு நடத்திய பெண்கள் சுவர் போராட்டத்துக்கு ஆதரவாக கன்னியாஸ்திரி கருத்துத் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், ’அவர் தனியாக கார், வீடு வாங்கி வாழ்ந்து வருகிறார். இதற்காக வங்கி கடனும் பெற்றுள்ளார். அனுமதியின்றி புத்தகங்களையும் வெளியிட்டிருக்கிறார். இது திருச்சபை விதிகளுக்கும் மதக் கோட்பாட்டுக்கும் எதிரானது’ என்று கூறி திருச்சபை அவரிடம் விளக்கம் அளிக்கக் கோரியது.  அவர் அதற்கு நான்கு முறை மெயில் மூலம் பதில் அளித்திருந்தார். பின்னர் அவரை நேரில் வந்து விளக்கம் அளிக்கும்படி திருச்ச பை அழைத்திருந்தது.

அதன்படி, மதர் சுப்பீரியர், சிஸ்டர் அன் ஜோசப்பை நேரில் சந்தித்து விளக்கம் அளித்தார். கன்னியாஸ்திரி லூசியின் விளக்கம் திருப்திகரமாக இல்லை என்று கூறி, திருச்சபையில் இருந்து உடனடியாக அவர் வெளியேற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அவராக வெளியேற வில்லை என்றால், கட்டாயமாக வெளியேற்றப்படுவார் என்றும் அவருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி கன்னியாஸ்திரி லூசி கூறும்போது, ‘’17 வயதில் இருந்து தேவாலயத்தில் இருக்கிறேன். மதக்கொள்கையின் படி, வழிகாட்டுதலின் படியும் தான் வாழ்ந்துவருகிறேன். இதைத் தவிர வேறு தனிப்பட்ட வாழ்க்கை எனக்கு இல்லை. இதுபற்றி தெளிவான விளக்கத்தைத் தெரிவித் துவிட்டேன். இருந்தும் என்னை வெளியேறும்படி கூறியுள்ளனர்’’ என்றார். 

இது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.