இந்தியா

ட்விட்டரால் புது வாழ்வு பெற்ற தடகள வீரர் - சிவராஜ் சிங் உதவி

webteam

சமூக வலைத்தளத்தில் வைரலான வீடியோவால் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு தடகள வீரருக்கு மத்திய அரசின் அகாடமியில் பயிற்சி பெற வாய்ப்பு கிடைத்துள்ளது.

19 வயதான ரமேஷ்வர் சிங் என்ற அந்த இளைஞர் சாலையில், வெறும் கால்களுடன் 100 மீட்டர் தொலைவை 11 விநாடிகளில் கடந்துள்ளார். இது தொடர்பான வீடியோவை ஆங்கில ஊடகச் செய்தியாளர் ஒருவர் பதிவிட, அதனை மத்தியப்பிரதேச முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் உடனடியாக ரீ ட்வீட் செய்திருந்தார். இதுபோன்ற திறமைமிக்க இளைஞர்களை அடையாளம் கண்டு மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் ஊக்குவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார். 

சிவராஜ் சிங் சவுகானின் பதிவைக் கவனித்த விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, அந்த இளைஞரை உடனே தன்னிடம் அழைத்து வரும்படி பதிவிட்டிருந்தார். மேலும் அவரை தடகள அகாடமியில் சேர்க்க ஏற்பாடு செய்வதாகவும் ரிஜிஜு குறிப்பிட்டிருந்தார். 

இது வைரலான நிலையில், ரமேஷ்வர் சிங் உடனடியாக போபாலில் உள்ள விளையாட்டு ஆணையத்துக்கு வரவழைக்கப்பட்டு, பயிற்சி எடுப்பதற்கான மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. அசாத்திய திறமை படைத்த ரமேஷ்வர் சிங்கை, மத்தியப்பிரதேசத்தின் "உசைன் போல்ட்" என வர்ணிக்கின்றனர்.