இந்தியா

பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு வசதி புகார்: முன்னாள் சிறை அதிகாரி வீட்டில் சோதனை

kaleelrahman

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுத்ததாக புகார் எழுந்த விவகாரத்தில் சிக்கிய அப்போதைய சிறை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார் வீட்டில் கர்நாடக ஊழல் ஒழிப்பு படையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

சொத்துக்குவிப்பு வழக்கில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15ஆம் தேதி அடைக்கப்பட்டு, தண்டனை காலம் முடிந்து கடந்த ஜனவரி 27 ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டார்.

இந்நிலையில் சிறையில் இருந்த, சசிகலா மற்றும் அவரது உறவினர் இளவரசி ஆகியோருக்கு தனி சமையலறை, சொகுசு படுக்கைகள், பார்வையாளர்கள் சந்திக்க சிறப்பு வசதி உட்பட பல்வேறு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதாக அப்போதைய சிறைத்துறை டிஐஜி ரூபா ஆதாரங்களுடன் குற்றம்சாட்டியிருந்தார்.

மேலும் சிறப்பு வசதிகள் செய்து கொடுக்க அப்போதைய சிறை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார் லஞ்சம் பெற்றதாகவும் கூறியிருந்தார். இதுதொடர்பாக ஏசிபி என்னும் ஊழல் ஒழிப்புப் படை விசாரித்து வருகிறது. கிருஷ்ணகுமார் தற்போது பெலகாவி இண்டல்கா மத்திய சிறை கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் பெங்களூரில் இருந்து சென்ற ஏசிபி அதிகாரிகள் சிறை வளாகத்தில் உள்ள கிருஷ்ணகுமாரின் வீட்டில் திடீர் சோதனை நடத்தினர். சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுத்தது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தினர். மேலும் அவருடைய வங்கிக் கணக்கு விவரம் சொத்து மதிப்பு உட்பட பல விவரங்களை கேட்டதாக கூறப்படுகிறது.