இந்தியா

விண்வெளிக்கு சுற்றுலா போகணுமா! ரூ.6 கோடி செலவில் பயணம் - இஸ்ரோவின் அசத்தல் திட்டம்

JustinDurai

விண்வெளி சுற்றுலா செல்ல ஒரு நபருக்கு ரூ.6 கோடி கட்டணம் ஆகும்.

2030-ம் ஆண்டுக்குள் இந்திய பயணிகளை விண்வெளிக்கு அழைத்து செல்ல திட்டமிட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறுகையில், ''இந்தியாவின் சொந்த விண்வெளி சுற்றுலா பயணத்துக்கான பணிகள் நடந்து வருகிறது. இந்த சுற்றுலா திட்டம் பாதுகாப்பானது. மீண்டும் பயன்படுத்தக்கூடியது. 2030-ம் ஆண்டுக்குள் இந்த திட்டம் தொடங்கி விடும். இதன் மூலம் இந்தியர்கள் விண்வெளி உடைகளை அணிந்து ராக்கெட்டில் விண்வெளிக்கு பயணம் செய்ய முடியும். விண்வெளி சுற்றுலா செல்ல ஒரு நபருக்கு ரூ.6 கோடி கட்டணம் ஆகும். இஸ்ரோ மூத்த அதிகாரிகள் அரசின் விண்வெளி சுற்றுலா முயற்சிக்கான பணிகளை துரிதப்படுத்தி வருகிறார்கள்.

உலக சந்தையில் விண்வெளி டிக்கெட்டுகளுக்கான கட்டணத்தை போட்டி போட்டு இந்தியா நிர்ணயம் செய்யும். விண்வெளி சுற்றுலா பயணம் மேற்கொள்பவர்கள் தங்களை விண்வெளி வீரர்கள் என்று அழைக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார். இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறுகையில், "அரசின் விண்வெளி சுற்றுலா திட்டம் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து திட்டமிடப்படும்" என்றனர்.

உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலன் மஸ்க் தனது ஸ்பேஸ் எக்ஸ் என்ற நிறுவனம் மூலம் விண்வெளிக்கு மக்களை சுற்றுலா அழைத்துச் செல்லும் திட்டத்தை ஏற்கனவே தொடங்கிவிட்டார். கடந்த 2021ஆம் ஆண்டில் அமெரிக்காவைச்  சேர்ந்த 4 பேர் இந்த விண்வெளிப் பயணம் மேற்கொண்டனர். பூமியில் இருந்து 575 கி.மீ. உயரத்தில் 3 நாட்களாக இவர்கள் பயணித்த விண்கலம் பூமியைச் சுற்றிவந்தது.

மணிக்கு 27,300 கி.மீ. வேகத்தில் 90 நிமிடங்களுக்கு ஒரு முறை பூமியை விண்கலம் சுற்றி வந்தது. 3 நாட்கள் விண்வெளி பயணத்திற்கு பிறகு 4 பேரும் பத்திரமாக பூமிக்குத் திரும்பினர். இதுநாள்வரை தொழில்முறை விண்வெளி வீரர்கள் மட்டுமே விண்வெளிக்கு பயணம் மேற்கொண்டு வந்தனர். முதல் முறையாக, இந்த 4 பேரும் விண்வெளிக்கு சுற்றுலாப் பயணம் மேற்கொண்ட முதல் பொதுமக்கள் என்ற சிறப்பை பெற்றார்கள்.