எம்எல்ஏ பாதுகாவலர் ஒருவரின் வங்கிக் கணக்கில் ரூ.100 கோடி அளவில் பணம் டெபாசிட் செய்யப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கான்பூரைச் சேர்ந்த குலாம் ஜிலானி, சமாஜ்வாதிக் கட்சி எம்எல்ஏவான இர்பான் சோலங்கியின் பாதுகாவலராக பணியாற்றி வருகிறார். ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்கச் சென்ற ஜிலானியின் கணக்கில் ரூ.99,99,02,724 இருப்பதாகக் காட்டவே, அதிர்ச்சியில் உறைந்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக இர்பான் சோலங்கி மூலம் மாவட்ட நீதிபதியிடம் புகார் அளித்தார். இதையடுத்து ஜிலானி கணக்கு வைத்துள்ள கான்பூர் மால் ரோடு பகுதியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கிக் கிளையில் இதுதொடர்பாக புகார் அளிக்குமாறு நீதிபதி அறிவுறுத்தினார். கடந்த சில மாதங்களாக தனது கணக்கில் இருந்து பணம் எடுக்க முடியவில்லை என்று ஜிலானி தனது புகாரில் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் குறித்து வங்கி தரப்பில் விசாரிக்கப்பட்டு வருகிறது.