இந்தியா

கேரளாவில் 3 நாட்களுக்கு முன்பே தொடங்கிய தென்மேற்கு பருவமழை

நிவேதா ஜெகராஜா

தென்மேற்கு பருவமழை கேரளாவில் 3 நாட்களுக்கு முன்பே தொடங்கியிருப்பதாக இந்திய வானிலை ஆய்வுமையம் தெரிவித்திருக்கிறது.

தென்மேற்கு பருவமழை ஆண்டுதோறும் வழக்கமாக ஜூன் 1ஆம் தேதியிலிருந்து பெய்யத்தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு முன்கூட்டியே கேரளாவில் பருவமழை தொடங்கிவிட்டதாக இந்திய வானிலை மையத்தின் இயக்குநர் தெரிவித்துள்ளதாக ஏ.என்.ஐ செய்தி வெளியிட்டுள்ளது. கேரளாவின் பல மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மே 29 மற்றும் 30ஆம் தேதிகளில் மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழையால் தென் அரபிக்கடல், லட்சத்தீவு, தென் தமிழகம் மற்றும் வங்காள விரிகுடாவில் மழைபெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தென்மேற்கு பருவமழையால் வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் கர்நாடகாவிலும் அடுத்த இரண்டு அல்லது மூன்று நாட்களில் மழைபெய்யும் வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.