Siddaramaiah, DK Shivakumar
Siddaramaiah, DK Shivakumar ANI twitter page
இந்தியா

விட்டுக் கொடுத்தாரா டி.கே.சிவக்குமார்.. மீண்டும் முதல்வர் ஆகிறார் சித்தராமையா? - லேட்டஸ்ட் அப்டேட்

Prakash J

கொதிக்கும் வெயில் குறைந்தபாடில்லை; ஆனால், அண்டை மாநிலமான கர்நாடகாவில் கொதித்த தேர்தல் களம், தற்போது சூடு குறைந்துள்ளது. கடந்த 10ஆம் தேதி, கர்நாடகாவில் 224 சட்டசபை தொகுதிகளுக்கு ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கை, கடந்த 13ஆம் தேதி நடைபெற்ற நிலையில், காங்கிரஸ் தனிப் பெரும்பான்மையுடன் 135 இடங்களைக் கைப்பற்றியது. இதையடுத்து, அக்கட்சி விரைவில் ஆட்சியமைக்க இருக்கிறது.

ஆளும் பாஜகவை வீழ்த்தி அறுதி பெரும்பான்மையுடன் காங்கிரஸ் வெற்றி பெற்றிருப்பது நாடு முழுவதும் பேசுபொருளாகி உள்ள நிலையில், கர்நாடகத்தில் அடுத்த முதல்வர் யார் என்ற பேச்சும் எழுந்துள்ளது. அதற்குக் காரணம், முன்னாள் முதல்வர் சித்தராமையா, காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் இடையே நீடிக்கும் பனிப்போர்தான் என்று கூறப்படுகிறது.

Siddaramaiah

கடந்த சில ஆண்டுகளாகவே அவர்கள் இருவரிடமும் மோதல் போக்கு இருப்பதாகக் கட்சியினர் தெரிவிக்கின்றனர். அவர்களுடைய மோதலில் தலையிட்ட காங்கிரஸ் தலைமை, இருவரையும் சமாதானமாக்கி, தேர்தலில் இணைந்து செயல்பட வலியுறுத்தியது. அதன்படி, இருவரும் ஒற்றுமையாகச் செயல்பட்டதாக ஊடகங்கள் வழியாகச் செய்திகள் வெளியாகின.

இதுகுறித்து டி.கே.சிவக்குமாரே, “எங்களுக்குள் எந்த மனக்கசப்பும் இல்லை; இருவரும் ஒற்றுமையாகத்தான் இருக்கிறோம்” எனக் கூறியிருந்தார். அதுபோல், சித்தராமையாவும் சொன்னதாகச் செய்திகள் வெளியாகின. இதைத் தொடர்ந்து நடைபெற்று முடிந்த சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் அபார வெற்றி பெற்றுள்ளது. இதில் இருவரின் உழைப்பும் இருப்பதாகக் கூறப்படுகிறது. என்றாலும் சித்தராமையாவைவிட, டி.கே.சிவக்குமாரின் உழைப்பே அதிகம் எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, முதல்வர் பதவிக்கான போட்டியில் டி.கே.சிவகுமார் மற்றும் சித்தராமையா இடையே கடும் போட்டி நிலவிவருகிறது.

DK Shivakumar

மேலும் இரு தலைவரின் ஆதரவாளர்களும் தங்கள் தலைவர்தான் அடுத்த முதல்வர் என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர் ஒட்டி தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். குறிப்பாக, அடுத்த முதல்வர் பதவிக்கு, டி.கே.சிவக்குமாரின் பெயரையே, பலரும் பரிந்துரைத்துள்ளனர். இதனால், கடந்த இரண்டு நாட்களாக முதல்வர் டி.கே.சிவக்குமார் என்ற ஹேஸ்டேக் வைரல் ஆனது.

இதற்கிடையே நேற்று இரவு (மே 14), காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், மேலிட பொறுப்பாளர் ரனதீப்சிங் சுர்ஜேவாலா உள்ளிட்ட முக்கிய பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர். 2 மணி நேரம் நடைபெற்ற கூட்டத்தில் கர்நாடகாவின் அடுத்த முதலமைச்சர் யார்? என்ற விவகாரத்தில் இறுதி முடிவெடுக்க அகில இந்திய காங்கிரஸ் தலைவருக்கு (மல்லிகார்ஜுன கார்கே) அதிகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சித்தராமையா ,மல்லிகார்ஜுன கார்கே, டி.கே.சிவக்குமார்

அப்போது, அடுத்த முதல்வர் குறித்து எம்.எல்.ஏக்கள் தெவித்த கருத்தை அறிக்கையாக தயாரித்து காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு மேலிட பார்வையாளர்கள அனுப்பி உள்ளனர். இந்த அறிக்கையின் பேரில் மாநிலத்தின் அடுத்த முதல்வர் யார் என்பதை மல்லிகார்ஜுன கார்கே இறுதி முடிவெடுத்து அறிவிப்பார் எனக் கூறப்படுகிறது.

DK Shivakumar

இந்த நிலையில், சித்தராமையா இன்று டெல்லி சென்றுள்ளார். அங்கு காங்கிரஸ் தலைவர்களைச் சந்தித்துப் பேச இருப்பதாகவும், அதன்பிறகு கர்நாடகாவின் புதிய முதல்வர் குறித்து அறிவிப்பு வெளியாகலாம் எனவும் சொல்லப்படுகிறது. இதற்கிடையே டி.கே.சிவக்குமாரும் டெல்லி செல்ல இருப்பதாகக் கூறப்பட்டது. ஆனால், அவர் டெல்லி செல்லவில்லை. உடல்நிலை குறைபாடு (வயிற்று வலி) காரணமாகவே டெல்லி செல்லவில்லை என்று சிவகுமார் கூறியுள்ளார்.

முன்னதாக, சித்தராமையாவை முதல்வராகத் தேர்ந்தெடுக்க 80 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தெரிவித்தாகச் சொல்லப்படுகிறது.

சித்தராமையா, டி.கே.சிவக்குமார்

மேலும், டி.கே.சிவக்குமாரை துணை முதல்வராகத் தேர்ந்தெடுக்கவும் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கு இருதரப்பும் ஒப்புக்கொண்டதாலேயே சித்தராமையா மட்டும் டெல்லிக்குச் சென்றிருப்பதாகக் கூறப்படுகிறது. இதையடுத்தே, அதுசம்பந்தப்பட்ட செய்திகளும், அறிக்கைகளும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. அதில் சித்தராமையா முதல்வராகவும், டி.கே.சிவக்குமார் துணை முதல்வராகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுடன் 31 அமைச்சர்கள் பொறுப்பேற்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி வருகிறது.