இந்தியா

போதை மருந்து கடத்தல் கும்பலுடன் கேரள நடிகர்களுக்கு தொடர்பு...? தீவிரமாகும் விசாரணை.!

webteam

பெங்களூரை சேர்ந்த போதை மருந்து கடத்தல் கும்பலுக்கும், கேரள நடிகர் - நடிகைகளுக்கும் தொடர்பிருப்பது தெரியவந்துள்ளது.

இந்தியாவில் போதைப் பொருட்கள் புழக்கம் அதிகம் உள்ள 272 மாவட்டங்களின் பட்டியலை மத்திய அரசு அண்மையில் வெளியிட்டிருந்தது. இதில் பெங்களூர், கோலார், மைசூர், உடுப்பி, குடகு, ராமநகரா ஆகிய கர்நாடக மாவட்டங்கள் முன்னணி இடத்தை பிடித்திருந்தன. இதையடுத்து கர்நாடகத்தில் போதை மருந்து கடத்தல் கும்பலை தடுக்க மாநில அரசு தவறிவிட்டதாக எதிர்க்கட்சிகள் உட்பட பல தரப்பிலிருந்து குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இதனால் பெங்களூரில் போதை மருந்து கடத்தல் கும்பலை விரைந்து பிடிக்குமாறு காவல்துறையை மாநில அரசு முடுக்கிவிட்டிருந்தது.

இதைத்தொடர்ந்து பெங்களூருவில் தடை செய்யப்பட்ட போதை மருந்து விற்பனைக் கும்பல் கைது செய்யப்பட்டது. கேரள தங்க கடத்தல் வழக்கு பிரதிகளான ஸ்வப்னா உள்ளிட்டோருக்கும், போதை மருந்து கடத்தல் கும்பலுக்கும் தொடர்பிருப்பது தெரியவர, அதுகுறித்து என்.ஐ.ஏ., அமலாக்கத்துறை, சுங்கத்துறை ஆகியவை விசாரித்து வந்தன.

இந்நிலையில் போதை மருந்து கும்பலுடன் கொச்சியில் உள்ள கேரள திரைப்பட நடிகர், நடிகைகளுக்கும் தொடர்பிருப்பது தெரியவந்துள்ளது. அதுமட்டுமின்றி அவர்கள் போதை மருந்து விற்பனை மற்றும் உபயோகத்தில் ஈடுபட்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்காக கொச்சியைச் சேர்ந்த மூன்று பெண்களும் போதை மருந்து கடத்தலில் ஈடுபட்டிருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கொச்சி போதைத்தடுப்பு பிரிவினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.