சனா கங்குலி, செளரவ் கங்குலி
சனா கங்குலி, செளரவ் கங்குலி instagram
இந்தியா

லட்சக்கணக்கில் சம்பளம் பெறும் செளரவ் கங்குலி மகள்!

Prakash J

’கிரிக்கெட் உலகின் தாதா’ என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் செளரவ் கங்குலி, மகத்தான சாதனைகளுக்குச் சொந்தக்காரராக உள்ளார். அதிலும், அவரது தலைமைப் பண்பு இன்றுவரை பலராலும் பேசப்பட்டு வருகிறது. இளம்வீரர்கள் மீது நம்பிக்கை வைத்து அவர்களை அடுத்தகட்டத்துக்கு தயார் செய்த பாணியே அதற்குக் காரணம்.

செளரவ கங்குலி

அதனால் மிகச் சிறந்த வீரர்கள் (சேவாக், ஹர்பஜன் சிங், யுவராஜ் சிங், தோனி, ஜாஹீர் கான், கெளதம் கம்பீர், ஆஷிஷ் நெஹ்ரா) இந்திய அணிக்கு கிடைத்தார்கள். இதே யுக்தியை பின்னாளில் ‘தல’ தோனியும் பின்பற்றினார். கங்குலி 2019ஆம் ஆண்டு பிசிசிஐ தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டார். ஆனால், மறுமுறை அந்த வாய்ப்பை பிசிசிஐ அவருக்குத் தரவில்லை. தற்போது இந்த ஆண்டுக்கான ஐபிஎல் சீசனில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் இயக்குநராக உள்ளார்.

இந்த நிலையில் அவரது மகள் சனா கங்குலி பெரிய நிறுவனம் ஒன்றில் பணி புரிவதாகவும், அங்கு அவர் அதிகம் சம்பளம் வாங்குவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. நடனக்கலைஞரான டோனாவை, திருமணம் செய்துகொண்ட கங்குலிக்கு, சனா கங்குலி என்ற மகள் உள்ளார்.

சனா கங்குலி

தன் தாயாரைப்போலவே நடனத்தின் மீது ஆர்வம் கொண்ட சனாவும் நடனம் மூலம் சிறுவயதிலேயே உலகளவில் பிரபலமானார். கொல்கத்தாவில் உள்ள லொரேட்டோ ஹவுஸ் பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை முடித்த சனா கங்குலி, தற்போது லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியில் (யுசிஎல்) பொருளாதாரத்தில் பட்டப்படிப்பைத் தொடர்ந்து வருகிறார். அவருடைய பட்டப்படிப்பு இந்த ஆண்டு நிறைவடைய இருக்கும் நிலையில், அதற்கு முன்பாக அவர் பெரிய நிறுவனம் ஒன்றில் பணி புரிவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

LinkedIn சுயவிவரத்தின்படி, சனா கங்குலி கடந்த 2022 ஜூன் மாதம் முதல் PwC நிறுவனத்தில் இன்டர்னாகப் (பயிற்சியாளராக) பணிபுரிவதாகத் தெரிவித்துள்ளார். PwC என்பது உலகின் மிகப்பெரிய நிதி ஆலோசனை நிறுவனங்களில் ஒன்று. இந்த நிறுவனத்தின் வணிகம் உலகம் முழுவதும் 152 நாடுகளில் பரவியுள்ளது. இந்த நிறுவனத்தில் 3.28 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர்.

சனா கங்குலி

தனது படிப்புடன் Enactus UCL நிறுவனத்தில் (தங்கள் சொந்த சமூக நிறுவனங்களை உருவாக்க போதுமான ஆலோசனைகள் மற்றும் வணிக வளர்ச்சிக்கு தேவையான வணிக தரவுகளை வழங்கும் நிறுவனம்) முழுநேரம் வேலை செய்துவரும் சனா கங்குலி, HSBC, KPMG, Goldman Sachs, Barclays உள்ளிட்ட உலகின் மிகப்பெரிய நிறுவனங்களுடன் பணிபுரியும் வாய்ப்பையும் பெற்றுள்ளார்.

இங்கு, இன்டர்ன்ஷிப் படிக்கும் மாணவர்களுக்கு இந்த நிறுவனங்களும் அதிக சம்பளம் கொடுக்கிறது என்பதுதான் சுவாரஸ்யமான விஷயம். UK.indeed.com என்ற இணையதளத்தின்படி, PwCயில் இன்டர்ன்ஷிப்பின்போது ஆண்டுக்கு சராசரியாக ரூ. 30 லட்சம் சம்பளம் வழங்கப்படுகிறது. இதையடுத்து, சனா கங்குலியும் ரூ.30 லட்சமோ அல்லது அதற்கு மேலோ சம்பளம் பெறலாம் எனக் கூறப்படுகிறது.

நடனக்கலை வாயிலாக சிறு வயதிலேயே சனா கங்குலி, பிரபலமாகி இருந்தாலும் கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் நாடாளுமன்ற இரு அவைகளிலும் குடியுரிமைத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டு அப்போதைய குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்தின் ஒப்புதலுடன் சட்டமாக மாறியது. இந்தச் சட்டத்தை எதிர்த்து இந்தியாவில் பல இடங்களில் போராட்டம் நடைபெற்றது.

சனா கங்குலி பதிவு

அந்தச் சமயத்தில், சனா கங்குலி பிரபல இந்திய எழுத்தாளர் குஷ்வந்த் சிங்கின், ’தி எண்ட் ஆப் இந்தியா’ என்ற புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சில வரிகள் அடங்கிய பக்கத்தை பதிவிட்டு குடியுரிமைத் திருத்த சட்டத்துக்கு எதிராக தனது நிலைப்பாட்டை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

செளரவ் கங்குலி பதிவு

சனாவின் அந்தப் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகிய நிலையில், அதற்கு அவருடைய தந்தை செளரவ் கங்குலி, ”இந்த விவகாரத்திலிருந்து சனாவை விட்டுவிடுங்கள். இந்த பதிவு உண்மை இல்லை. அவள் இளம் பெண். அரசியலைப் பற்றி சனாவுக்கு எதுவும் தெரியாது” என்று விளக்கம் அளித்திருந்தார். இதைத் தொடர்ந்து சனா கங்குலி, அந்தப் பதிவை நீக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.