சௌமியா விஸ்வநாதன்
சௌமியா விஸ்வநாதன் pt web
இந்தியா

தொலைக்காட்சி செய்தியாளர் சௌமியா விஸ்வநாதன் கொலை வழக்கு; 15 ஆண்டுகளுக்குப் பின் கிடைத்த தீர்ப்பு

Angeshwar G

தெற்கு டெல்லியில் தொலைக்காட்சி செய்தியாளர் சௌமியா விஸ்வநாதன் கடந்த 2008 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். 25 வயது பத்திரிக்கையாளரான அவர் செப்டம்பர் 30 ஆம் தேதி அதிகாலை 3 மணியளவில் பணி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவரை மர்ம நபர்கள் கொலை செய்தனர். அதிகாலை 3.30 மணியளவில் நடந்த கொலை சம்பவம் கொள்ளை அடிப்பதற்காக செய்யப்பட்டிருக்கலாம் என்றே காவல்துறையினர் ஆரம்பத்தில் தெரிவித்திருந்தனர்.

ஆனாலும் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியாமல் காவல்துறையினர் திணறினர். போதிய ஆதாரங்கள் கிடைக்காததால் குற்றவாளிகளை பிடிக்க முடியாத நிலையே இருந்தது. ஆனால் 2009 ஆம் ஆண்டு பிபிஓ ஊழியர் கொலை வழக்கை விசாரணை செய்த போது அதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் சௌமியா விஸ்வநாதன் கொலை வழக்கிலும் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்தது.

தொடர்ந்து விசாரணை நடந்து வந்தது. டெல்லி காவல்துறையினர் குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்திருந்தனர். வழக்கு தொடர்ந்து விசாரணை நடந்து வந்த வண்ணம் இருந்தது. 15 வருடங்களாக நடந்த இந்த கொலை வழக்கில் விசாரணை முடிந்த போது கொலை செய்யப்பட்டதற்கான காரணமும் அப்போது மாறுபட்டிருந்தது.

குற்றவாளிகள் சென்ற காரை சௌமியா முந்திச் சென்றுள்ளார். காரில் ஒரு பெண் தனியாக இருப்பதை பார்த்த 4 பேரும் காரில் அவரைப் பின்தொடர்ந்துள்ளனர். காரை மறிக்க முயன்றும் சௌமியா காரை நிறுத்தாததால் கபூர் துப்பாக்கியால் அவரை சுட்டுள்ளார். குண்டு தலையில் பாய்ந்ததில் உடனடியாக சௌமியா மரணமடைந்துள்ளார். கட்டுப்பாட்டை இழந்த கார் தடுப்பில் மோதி நின்றுள்ளது. குற்றவாளிகள் உடனடியாக அந்த இடத்தில் இருந்து தப்பிவிட்டனர். அருகில் உள்ள கடையில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் அதிகாலை 3.45 மணியளவில் காரில் ஒரு பெண் இருப்பதைக் கண்டு காவல்துறைக்கு தெரிவித்துள்ளார். இதனை அடுத்து தொடர் விசாரணை நடத்தப்பட்டு வந்தது.

கடந்த மாதம் கூடுதல் செஷன்ஸ் நீதிபதி ரவீந்திர பாண்டே குற்றம் சாட்டப்பட்டவர்களை குற்றவாளிகள் என தீர்ப்பளித்தார். கொலைக் குற்றவாளிகளான ரவி கபூர், அமித் சுக்லா, பல்ஜீத் மாலிக் மற்றும் அஜய் குமார் ஆகியோரை கொலை செய்ததற்காகவும், அஜய் சேத்தி என்பவரை திருடப்பட்ட பொருளை பெற்றதற்காகவும் குற்றவாளிகள் என தீர்ப்பளித்திருந்தது குறிப்பிடத்தக்கது. தண்டனை குறித்தான விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. கொலைக் குற்றவாளிகளான 4 பேருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்த நீதிமன்றம் ஒவ்வொருவருக்கும் தலா 1.25 லட்சம் அபராதமும் விதித்தது. ஐந்தாவது குற்றவாளியான அஜய் சேத்திக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.7.25 லட்சம் அபராதமாகவும் விதித்தது. மொத்த அபராதத்தொகையில் ரூ.12 லட்சத்தை பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினருக்கு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.