இந்திய ரயில்வே வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு புதிய சேவையை தொடங்க ரயில்வே திட்டமிட்டுள்ளது.
பொதுவாக ரயில் பயணங்களை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்புவார்கள். ‘தடக்தடக்’ என்ற சத்தமும், ரயிலுக்கே உண்டான தாலாட்டும் அனைவரையும் விரும்பச் செய்யும். இதெல்லாம் ஒரு காரணமாக இருந்தாலும், நடுத்தர மக்களுக்கு தாக்குப்பிடிக்கும் படி இருக்கும் கட்டணமே ரயிலில் கூட்டம் அலைமோதுவதற்கு காரணம்.
இந்நிலையில் இந்திய ரயில்வே வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு புதிய சேவையை தொடங்க ரயில்வே திட்டமிட்டுள்ளது. அதாவது ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு மசாஜ் சேவையை வழங்க ரயில்வே திட்டமிட்டுள்ளது. மேற்கு ரயில்வே மண்டலத்தின் ரத்லம் பிரிவு இதற்கான பரிந்துரையை வழங்கியுள்ளது. இந்தூரிலிருந்து புறப்படும் 39 ரயில்களில் இந்தச் சேவையை தொடங்க திட்டமிட்டுள்ளது ரயில்வே.
ரயில்வேக்கான வருமானத்தை அதிகரிப்பது மட்டுமில்லாமல் பயணிகளையும் அதிகரிக்கும் நோக்கில் இந்த மசாஜ் சேவை தொடங்கப்பட உள்ளதாக தெரிகிறது. கால் மற்றும் தலைக்கு மசாஜ் கட்டணமாக ரூபாய் 100 வசூலிக்கவும் இந்தப் பரிந்துரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இது குறித்து அதிகாரபூர்வமான அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.