இந்தியா

“அன்புக்காகச் செய்கிறேன்.. இதில் அரசியல் எதுவும் இல்லை”: சிவசேனாவிற்கு சோனு சூட் விளக்கம்

“அன்புக்காகச் செய்கிறேன்.. இதில் அரசியல் எதுவும் இல்லை”: சிவசேனாவிற்கு சோனு சூட் விளக்கம்

rajakannan

புலம்பெயர் தொழிலாளர்களுக்குச் செய்யும் சேவையில் எவ்வித அரசியலும் இல்லை என்று நடிகர் சோனு சூட் தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகர் சோனு சூட் தன்னுடைய சொந்த செலவில் புலம்பெயர் தொழிலாளர்களை அவர்களுடைய சொந்த மாநிலங்களுக்குச் செல்வதற்காகப் பேருந்து வசதிகளை ஏற்பாடு செய்து கொடுத்து வருகிறார். இவர் ஒடிசா, பீகார், உத்திரப் பிரதேசம், ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 18,000 முதல் 20 ஆயிரம் வரையிலான புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அவர்களது சொந்த மாநிலங்களுக்கு அவர் அனுப்பியுள்ளதாகத் தெரிகிறது. தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர்களையும் அவர் தன்னுடைய சொந்த செலவில் அவர்களது ஊர்களுக்கு அனுப்பி வைத்தார். இவரது இந்தச் செயலுக்குப் பலரும் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

மும்பையில் தவிக்கும் வெளிமாநில தொழிலாளர்களுக்கு சோனு சூட் தனது ஏற்பாட்டில் பேருந்து வசதி ஏற்படுத்திக் கொடுத்து வருவதை விமர்சித்து சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் செய்தி வெளியாகியிருந்தது. சோனு சூட்டை பாரதீய ஜனதா பின்னால் இருந்து இயக்குவதாகவும், அதனால் அவர் சிவசேனா தலைமையிலான மாநில அரசாங்கத்துக்கு அவப்பெயரை ஏற்படுத்துவதற்காக திடீர் மகாத்மாவாக மாறியுள்ளார் என்று அதில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

 இதனிடையே, கடந்த திங்கட்கிழமை இரவு மும்பை பந்த்ரா ரயில் நிலையத்தில் ஷார்மிக் சிறப்பு ரயிலில் உத்தரப்பிரதேசம் செல்ல இருந்த தொழிலாளர்களை சோனு சூட் பார்க்கச் சென்றார். ஆனால் அங்கிருந்த அதிகாரிகள் அவரைப் பார்க்க விடவில்லை.

இந்நிலையில், புலம்பெயர் தொழிலாளர்களுக்குச் செய்யும் சேவையில் எவ்வித அரசியலும் இல்லை என்று நடிகர் சோனு சூட் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிடிஐ-க்கு அவர் அளித்த பேட்டியில், “நான் இதுபோல் தடுத்து நிறுத்தப்பட்டது இதுவே முதல் முறை. இருந்தாலும் பரவாயில்லை. என்னைப் பார்த்த உடன் அங்கிருந்த 2000 முதல் 2500 தொழிலாளர்கள் உற்சாகமடைந்து கூட்டம் கூடி இருக்கலாம் என்பதைக் கருத்தில் கொண்டு ரயில்வே பாதுகாப்புப் படையினர் தடுத்து நிறுத்தியிருக்கலாம். நிலைமையைப் புரிந்து கொண்டு, அவர்கள் சொன்ன விதிமுறைகளைப் பின்பற்றினேன்.

என்னுடைய செயலில் அரசியல் எதுவும் இல்லை. புலம்பெயர் தொழிலாளர்கள் மீதுள்ள உண்மையான அன்பின் காரணமாகவே நான் இதனைச் செய்து கொண்டிருக்கிறேன். புலம் பெயர் தொழிலாளர்களை அவர்களுடைய குடும்பங்களைச் சென்று சேர வேண்டுமென்றே விரும்புகிறேன்.

கடைசி புலம்பெயர் தொழிலாளர் தன்னுடைய சொந்த வீட்டிற்குச் சென்று சேரும் வரை நான் எனது பணியைத் தொடர்வேன். இந்தப் பயணம் முழுவீச்சுடன் தொடரும். வீடற்றவர்களாக யாரும் இருக்கக் கூடாது. அவர்கள் பாதுகாப்புடன் அவர்களது வீடுகளுக்குச் சென்றுசேர வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம்.

நானும் இதே மும்பை நகருக்குப் புலம்பெயர் நபராகத் தான் வந்தேன். ரயில்வே ஒருநாள் இங்கு வந்து சேர்ந்தேன். என்னைப்போலவே ஒவ்வொருவரும் சிறப்பான வாழ்க்கை கிடைக்கும் என்ற கனவுடன் மும்பைக்கு வருகிறார்கள்” என்று கூறினார்.