சோனியா காந்தி
சோனியா காந்தி pt web
இந்தியா

“பாஜக-வால் ஜனநாயகத்தின் குரல்வலை நெரிக்கப்படுகிறது” சோனியா காந்தி

Angeshwar G

நாடாளுமன்றத்தில் இதுவரை 141 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மக்களவையைச் சேர்ந்த 95 எதிர்க்கட்சி உறுப்பினர்களும், மாநிலங்களவையைச் சேர்ந்த 46 எதிர்க்கட்சி உறுப்பினர்களும் இதுவரை இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மக்களவையில் பார்வையாளர்கள் இருவர் அத்துமீறி நுழைந்தது மற்றும் புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பாதுகாப்பு குறைபாடு குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இந்த விவகாரம் தொடர்பாக விரிவான விவாதம் நடத்த வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைத்த வண்ணம் இருக்கின்றனர்.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்திய எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்.பிக்கள் சிலர் கடந்த 14 ஆம் தேதி இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில், 18 ஆம் தேதியும் எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இந்நிலையில் நேற்றும் இது தொடர்பான விவகாரம் வலுக்க நேற்றும் 46 எதிர்க்கட்சி உறுப்பினர்களை இடைநீக்கம் செய்துள்ளனர்.

எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க நாடாளுமன்ற வளாகத்தில், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. கல்யாண் முகர்ஜி, குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கரை போலச் செய்தது விமர்சனத்திற்குள்ளானது. இது தொடர்பாக பாஜகவின் மூத்த தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் போன்றோர் கண்டனங்களைத் தெரிவித்திருந்தனர். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவும் தனது அதிருப்தியும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நாடாளுமன்றத்தில் எம்..பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டது குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.

SoniaGandhi | Congress | BJP

டெல்லியில் காங்கிரஸ் நாடாளுமன்ற குழு கூட்டத்தில் எம்.பி.க்களிடையே பேசிய சோனியா காந்தி, “பாஜக அரசால் ஜனநாயகத்தின் குரல்வலை நெரிக்கப்பட்டு விட்டது. நியாயமான கோரிக்கைகளை எழுப்பியதற்காக முன் எப்போதும் இல்லாத வகையில் எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

நாடாளுமன்ற அத்துமீறல் சம்பவம் மன்னிக்கவோ, நியாயப்படுத்தவோ முடியாதது. பாஜக எதிர்க்கட்சியாக இருந்திருந்தால் இந்த சம்பவத்தை மிக மோசமாக கையாண்டிருப்பார்கள்.

பிரதமர் மோடிக்கு இது குறித்து பேசுவதற்கு நான்கு நாட்கள் ஆகியுள்ளது. மேலும் அவர் நாடாளுமன்றத்திற்கு வெளியேதான் இது குறித்து பேசி இருந்தார். இதன் மூலம், பிரதமர் மோடி, சபையின் கண்ணியத்தை அலட்சியப்படுத்துவதையும், நம் நாட்டு மக்களை அலட்சியப்படுத்துவதையும் தெளிவாகக் காட்டியுள்ளார்” என தெரிவித்துள்ளார்.