இந்தியா

உங்கள் செலவை சோனியா காந்தி ஏற்றுள்ளார்" - காங்கிரஸ் எம்எல்ஏவின் விளம்பரம் !

PT

ரயில்களில் வெளிமாநிலம் செல்லும் புலம் புயர்ந்த தொழிலாளர்களிடம் சர்ச்சைக்குரிய வகையில் துண்டுப் பிரசுரங்களை வழங்கிய காங்கிரஸ் எம்.எல்.ஏவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னதாக காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் வெளிமாநிலத்தவர்கள்
அவர்களின் சொந்த ஊர் திரும்புவதற்கு அரசு உதவாத பட்சத்தில், அவர்கள் ஊர் திரும்புவதற்கான பணத்தை காங்கிரஸ் கட்சியே செலுத்தும் என்றும் இது குறித்த நடவடிக்கைகளை அந்தந்த மாநில காங்கிரஸ் கட்சி தலைவர்கள் எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பஞ்சாப் மாநிலம் பட்டிண்டா ரயில் நிலையத்தில் இருந்து வெளிமாநிலத்தவர்களை ஏற்றிக்கொண்டு பீகாருக்குச் செல்ல தயாராக இருந்தது. இதனையடுத்து அங்கு வந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ அமரிந்தர் ராஜா பயணிகள் அனைவரிடமும் துண்டு பிரசுரங்களை அளித்தார். அதில் நீங்கள் ஊர் திரும்புவதற்கான பணத்தை சோனியா காந்தி அளித்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும் ரயில் கிளம்பும் முன்னர் அமரிந்தர் ராஜா உரை ஒன்றையும் நிகழ்த்தினார் “ அதில் கடந்த வாரம் சோனியா காந்தி வெளிமாநிலத்தவர்கள் ஊர் திரும்புவதற்கான பணத்தை காங்கிரஸ் கட்சியே ஏற்கும் என்றும் அறிவித்தார். அதன்படி பஞ்சாப் மாநில முதல்வர் அமரிந்தர் சிங் மற்றும் சுனில் ஜாகர் உங்களுக்கு இந்தப் பணத்தை அனுப்பியுள்ளார்கள்” எனக் கூறினார். இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக பொதுமுடக்கம் அமலில் உள்ள நிலையில் முதன் முறையாக ரயில் நிலையத்தில் எம்.எல்.ஏ பரப்புரையில் ஈடுபட்டது மலிவான விளம்பரம் என்று பலரும் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.