காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி வயிற்றுக் கோளாறு காரணமாக டெல்லியிலுள்ள கங்காராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாகவே உடல் நலம் பாதிக்கப்பட்டு இருக்கும் சோனியா காந்தி அடிக்கடி அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று வருகிறார். கடந்தாண்டும், வாரணாசி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த சோனியா காந்திக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டதால் அவசரமாக விமானம் மூலம் டெல்லி கொண்டு வரப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்நிலையில் இமாசலப் பிரதேசத்தின் சிம்லாவில் ஓய்வை கழிக்க சென்றிருந்த சோனியா காந்திக்கு திடீரென வயிற்றுக் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் பயணத்தை பாதியில் முடித்துக்கொண்டு அவர் டெல்லிக்கு திரும்பியுள்ளார். ஏர் ஆம்புலன்ஸ் மூலம் அவர் அழைத்து வரப்பட்டதாக தெரிகிறது. சோனியாவின் உடல்நிலை தொடர் கண்காணிப்பில் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.