நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்கும் விழாவில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.
மக்களவைத் தேர்தலில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 352 இடங்களில் வெற்றி பெற்றது. பாஜக மட்டும் 303 இடங்களில் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. பாஜக சார்பில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்கிறார்.
இந்தப் பதவியேற்பு விழா நாளை மாலை 7 மணிக்கு டெல்லிலுள்ள ராஷ்ட்ரபதி பவனில் நடைப்பெறுகிறது. இந்தப் பதவியேற்பு விழாவில் பங்கேற்குமாறு அரசியல் கட்சித் தலைவர்கள், முதலமைச்சர்கள் மற்றும் பிரபலங்கள் பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் சில வெளிநாட்டு தலைவர்களும் கலந்துக் கொள்ள இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் இரண்டாவது முறையாக நரேந்திர மோடி பதவி ஏற்கும் நிகழ்வில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவருமான சோனியா காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் பங்கேற்க உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்க உள்ளதாக அறிவித்துள்ளார். மோடி பதவி ஏற்பு விழாவில், வெளிநாட்டு தலைவர்கள், உள்நாட்டு அரசியல் தலைவர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சார்ந்த பிரபலங்கள் உள்ளிட்ட 6ஆயிரத்து 500க்கும் அதிகமான விருந்தினர்கள் பங்கேற்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த 2014ஆம் ஆண்டு மோடி பதவி ஏற்ற போது ஏறக்குறைய 5ஆயிரம் விருந்தினர்கள் அந்நிகழ்வில் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.