உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த், வழக்கு ஒன்றின் விசாரணையின்போது கூறிய கருத்துகளின் பின்னணியில், அமெரிக்காவில் படித்து வரும் அபிஜீத் திப்கே என்பவரால் இன்ஸ்டாவில் 'கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ என்ற பக்கம் தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில், சமூக வலைதளங்களில் மட்டுமே, அரசின் மீது விமர்சனங்களை முன்வைத்த அந்தக் கட்சி, தொடர்ச்சியான, நீட் மற்றும் சிபிஎஸ்இ முறைகேடுகளுக்குப் பிறகு, கடந்த கடந்த ஜூன் மாதம் டெல்லியில் முதன்முறையாக போராட்டத்தில் ஈடுபட்டது. இதில், ஏராளமான இளைஞர்கள் பங்கேற்றதுடன், அக்கட்சியின் நிறுவன அபிஜீத் திப்கேவும் கலந்துகொண்டார்.
தொடர்ந்து, இந்தியாவின் பல்வேறு நகரங்களில் கரப்பான் பூச்சி கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். எனினும், அவர்களின் போராட்டத்து மத்திய அரசு செவி சாய்க்கவில்லை. இந்த சூழலில் தான் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி, டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி கட்சியினர் கடந்த ஜூன் 20-ம் தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில், போராட்டத்தின் ஒரு பகுதியாக சுற்றுச்சூழல் ஆர்வலரும், கல்வியாளருமான சோனம் வாங்சுக் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். அவரது போராட்டம் இன்றுடன் 19-வது நாளை எட்டியிருக்கிறது.
இதன் காரணமாக, அவரின் உடல்நிலை மேலும் பலவீனமடைந்து வருகிறது. எனவே அவரின் போராட்டத்தை கைவிட வேண்டும் என பல தரப்பினர் கோரிவரும் நிலையில், இதுகுறித்து காணொளி ஒன்றை சோனம் வாங்சுக் வெளியிட்டுள்ளார். அதில், எனது உண்ணாவிரதத்தை முடிக்குமாறு கேட்டு ஆயிரக்கணக்கான செய்திகளை நான் பெற்றுள்ளேன். பல மூத்த அரசியல்வாதிகள் என்னிடம் வந்து அன்போடும் அக்கறையோடும் பேசியுள்ளனர்.
போராட்டக்காரர்கள் அமர்ந்துவிட்டுச் சென்றுவிடுவார்கள், தான் உண்ணாவிரதத்தை முடித்தால் என்ன மாற்றம் ஏற்படும். நான் சாப்பிட்டால், மக்களின் கேள்விகளுக்கு பொறுப்புக்கூறல் தேவையில்லை என்பதே அரசாங்கத்திற்குச் செல்லும் செய்தியாக இருக்கும் எனத் தெரிவித்தார்.
அதற்குப் பதிலாக, ஜூலை 20 அன்று கரப்பான்பூச்சி ஜனதா கட்சி முன்மொழிந்துள்ள நாடாளுமன்றப் பேரணியை மக்கள் வலுப்படுத்த வேண்டும் என்றும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அரசியல் அறிவியல் மற்றும் ஜனநாயகம் குறித்த ஒரு உண்மையான பாடத்தில் பங்கேற்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருக்கிறார்.