5ம் கட்டத் தேர்தலில் ஜனநாயக கடமையை நிறைவேற்றுவதற்காக முக்கிய பணிகளுக்கு இடையிலும், சிலர் வாக்களிக்க முன் வந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் வாக்காளர் ஒருவர் தனது தந்தைக்கு இறுதிச் சடங்கு செய்துவிட்டு, வீட்டிற்குக் கூட செல்லாமல் ஈர உடையுடன் நேரடியாக வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்தார். காலையில் தந்தை உயிரிழந்த துக்கத்தையும் தள்ளி வைத்துவிட்டு, ஜனநாயக கடமையை நிறைவேற்றுவதற்காக அந்த இளைஞர் வாக்குச்சாவடிக்கு வந்திருந்தது, அங்கிருந்த வாக்காளர்களை நெகிழ்ச்சி அடைய வைத்தது.
இதே போல் பீகார் மாநிலம் சாரன் என்ற தொகுதியில் ராஜ் கிஷோர்சிங் என்ற முதியவர் தள்ளாத வயதையும் பொருட்படுத்தாமல் வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்களித்தார். அவருக்காக தேர்தல் ஆணையம் சார்பில் சக்கர நாற்காலி ஏற்பாடு செய்து வழங்கப்பட்டது. இதுவரை நடந்த அனைத்து தேர்தலிலும் தவறாமல் வாக்களித்து வருவதாக அந்த முதியவர் உற்சாகத்துடன் தெரிவித்தார்.