கர்நாடகாவில் எடியூரப்பா தலைமையில் அமைந்திருக்கும் புதிய அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிக்க மதசார்பற்ற ஜனதா தளம் முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மதசார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணியை சேர்ந்த அதிருப்தி எம்எல்ஏக்கள் 14 பேர் ராஜினாமா செய்ததால், குமாரசாமி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அண்மையில் சட்டப்பேரவையில் நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு கவிழ்ந்ததை அடுத்து, பாரதிய ஜனதா மாநில தலைவர் எடியூரப்பா தலைமையில் தற்போது புதிய அரசு அமைந்துள்ளது. வரும் திங்கள்கிழமை அன்று சட்டப்பேரவையில் அவர் பெரும்பான்மையை நிரூபிக்கவுள்ளார்.
இந்நிலையில், மதசார்பற்ற ஜனதா தளம் சார்பில் அடுத்தக் கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து அக்கட்சி எம்எல்ஏக்களுடன், குமாரசாமி ஆலோசனை நடத்தினார். அப்போது எடியூரப்பாவுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிப்பது குறித்து குமாரசாமி பேசியதாகவும், இதற்கு ஒரு சில எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்திருப்பதாகவும் அக்கட்சியின் எம்எல்ஏவும், முன்னாள் மாநில அமைச்சருமான ஜி.டி.தேவேகவுடா கூறினார். எனினும் இந்த விவகாரத்தில் குமாரசாமி தான் இறுதி முடிவு எடுப்பார் என்றும் அவர் தெரிவித்தார்.