இந்தியா

இந்தியாவில் 50 லட்சம் கொரோனா பாதிப்பு... ஆக்சிஜன் பற்றாக்குறையில் மருத்துவமனைகள்

இந்தியாவில் 50 லட்சம் கொரோனா பாதிப்பு... ஆக்சிஜன் பற்றாக்குறையில் மருத்துவமனைகள்

webteam

இந்தியாவில் ஊரடங்கு பல்வேறு தளர்வுகளுடன் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சில மாநிலங்களில் கொரோனா பரவலும் அதிகரித்து வருகிறது. இதுவரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 50 லட்சத்தைத் தொட்டுள்ளது. தற்போது நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க போதுமான ஆக்சிஜன் சிலிண்டர் வசதியில்லாமல் அரசு மருத்துவமனைகள் தவித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்கள் கொரோனா பரவலில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. இங்கு அதற்கேற்ற அளவுக்கு ஆக்சிஜன் சிலிண்டர் வசதிகள் இல்லை என அரசு மருத்துவர்களும் அதிகாரிகளும் கவலை தெரிவித்துள்ளனர்.

"எனக்கு தினமும் ஆக்சிஜன் சிலிண்டர்கள் கேட்டு தொலைபேசி அழைப்புகள் வந்துகொண்டே இருக்கின்றன. என்னிடம் எப்போது ஸ்டாக் இருக்கும் என்று தெரியவில்லை" என்கிறார் நாசிக்கைச் சேர்ந்த ஆக்சிஜன் விநியோகஸ்தரான ரிஷிகேஷ் பட்டீல்.

உலகிலேயே வேகமாக கொரோனா பரவிவரும் நாடாக இந்தியா உள்ளது. கடந்த 12 நாட்களில் மிகப்பெரிய அளவில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவை அடுத்து 50 லட்சத்துக்கும் அதிகமான கொரோனா நோயாளிகள் உள்ள இரண்டாவது நாடாக இந்தியா இருக்கிறது.

குறிப்பாக, உத்தரப் பிரதேச மாநிலத்தில் சாதாரண நாட்களில் ஆயிரம் ஆக்சிஜன் சிலிண்டர்கள் தேவையென்றால், கொரோனா காலத்தில் 5 ஆயிரம் சிலிண்டர்கள் தேவையாக உள்ளதாக மாநில சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.