இந்தியா

“1990ல் இருந்தது ஆளுநர் ஆட்சி” - தி காஷ்மீர் பைல்ஸ் மீது உமர் அப்துல்லா காட்டமான விமர்சனம்

webteam

“தி காஷ்மீர் பைல்ஸ்” திரைப்படத்தில் அளவுக்கு அதிகமான பொய்கள் முன்வைக்கப்படுவதாக ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா குற்றம் சாட்டியுள்ளார்

1990-களில் காஷ்மீரில் இருந்து வெளியேற்றப்பட்ட பண்டிட்கள் குறித்த உண்மை சம்பவத்தை தழுவிய கதையம்சம் கொண்டதாக கூறி எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’. இந்த திரைப்படம் கடந்த 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. பிரதமர் மோடி உட்பட பலரும் இந்த படத்தை பாராட்டி வருகின்றனர். அதே நேரத்தில் காங்கிரஸ் இந்த படத்தை கடுமையாக விமர்சித்து வருகிறது. சில மாநிலங்களில் இந்த படத்திற்கு 100 சதவிகித வரி விலக்கும் வழங்கப்பட்டுள்ளது. 

கலவையான விமர்சனங்களை இப்படம் பெற்று வரும் நிலையில் காஷ்மீர் முன்னாள் முதல்வர் இப்படத்தை விமர்சித்து பேட்டி அளித்துள்ளார்.  தேசிய மாநாட்டுக் கட்சி செயல் தலைவரும் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வருமான உமர் அப்துல்லா “தி காஷ்மீர் ஃபைல்ஸ்” திரைப்படம் ஒரு இட்டுக்கட்டப்பட்ட கதை என்று கூறினார். தெற்கு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் நடைபெற்ற பேரணியில் ஊடகங்களுக்குப் பேட்டியளித்த உமர் காஷ்மீர் பைல்ஸ் படம் ஒரு ஆவணப்படமா அல்லது வணிகப் படமா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்று கூறினார்.

“படம் யதார்த்தத்தை அடிப்படையாகக் கொண்டது என்று தயாரிப்பாளர்கள் கூறியுள்ளனர். ஆனால் படத்தில் பல பொய்கள் திட்டமிட்டு காட்சிப் படுத்தப்பட்டுள்ளது என்பதுதான் உண்மை. 1990 ஆம் ஆண்டு தேசிய மாநாட்டுக் கட்சி ஆட்சியில் இருந்தது என்பது மிகப்பெரிய பொய். காஷ்மீர் பண்டிட்டுகள் வெளியேறியபோது காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி இருந்தது. மத்தியில், வி.பி. சிங் தலைமையிலான பா.ஜ.க.வின் ஆதரவுடைய அரசு தான் இருந்தது'' என உமர் கூறினார்.

மேலும், "அச்சமயத்தில் காஷ்மீர் பண்டிட்கள் மட்டும் புலம்பெயரவும் இல்லை. கொல்லப்படவும் இல்லை. முஸ்லிம்கள் மற்றும் சீக்கியர்களும் கொல்லப்பட்டனர், அவர்களும் காஷ்மீரில் இருந்து புலம்பெயர வேண்டியிருந்தது, இன்னும் அவர்கல் காஷ்மீருக்கு திரும்பி வரவில்லை" என்று உமர் கூறினார். காஷ்மீர் பண்டிட்களை பாதுகாப்பாக அழைத்து வருவதில் தேசிய மாநாட்டுக் கட்சி தனது பங்கை தொடர்ந்து செய்து வருவதாகவும் அவர் கூறினார்.

இத்திரைப்படம் குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி “முழுக்க வெறுப்பை விதைக்கும் நோக்கில் படம் எடுக்கப்பட்டுள்ளது. அரைகுறை உண்மைகளே படம் முழுக்க காட்சிப்படுத்தப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார். “இந்த திரைப்படம் முழுக்கவும் கற்பனையே. ஒரு வார்த்தையின் சொல்வதென்றால் இது ஒரு சதி” என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரித்துள்ளார்.