Balasore Train Accident
Balasore Train Accident  PTI
இந்தியா

Odisha Train Tragedy | ஓடிஷாவில் நிகழ்ந்த கோர ரயில் விபத்தில் இதுவரை 233 பேர் உயிரிழப்பு

webteam

பெங்களூருவிலிருந்து கொல்கத்தாவுக்கு புறப்பட்ட துரந்தோ எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று மாலை 7 மணியளவில் ஒடிசா மாநிலம் பகனக பஜார் பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்போது அந்த ரயிலின் பெட்டிகள் தடம்புரண்டு அருகே இருந்த தண்டவாளத்தில் விழுந்தன.அப்பெட்டிகள் மீது எதிரே கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் மோதியது. அருகே லூப் லைனில் நின்றிருந்த ஒரு சரக்கு ரயில் மீது இப்பெட்டிகள் விழுந்துள்ளன.

train accident

கண்ணிமைக்கும் நேரத்தில் அடுத்தடுத்து நேர்ந்த இந்த கோர நிகழ்வில் பெட்டிகள் கடுமையாக மோதிக் கொண்டதில் பெரும் சேதம் ஏற்பட்டது. சில பெட்டிகள் ஒன்றன் மேல் ஒன்றாக ஏறின. சில பெட்டிகள் தலைகீழாக கவிழ்ந்தன. பெட்டிகளின் இடிபாடுகளில் சிக்கி பலர் இறந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். விபத்து நிகழ்ந்தவுடன் உள்ளூர் மக்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். பின்னர் மாநில,தேசிய பேரிடர் மீட்புப் படையினரும் மீட்புப் பணிகளை தொடங்கினர். இதைத் தொடர்ந்து விமானப்படையினரும் மீட்புப் பணியில் இணைந்து கொண்டனர்.

காயமடைந்தோர் அருகிலிருந்த மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். காயமடைந்த பயணிகளை ஆம்புலன்ஸ் மற்றும் பேருந்துகள் மூலம் மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இவ்விபத்தில் இதுவரை 233 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் 900 பேர் காயமடைந்துள்ளதாகவும் ஒடிஷா மாநில தலைமைச் செயலாளர் பிரதீப் ஜேனா தெரிவித்தார். மீட்பு பணிகளை ஒடிஷா அமைச்சர்கள் கவனித்து வரும் நிலையில் முதலமைச்சர் நவீன் பட்நாயக்கும் விபத்து நடந்த இடத்திற்கு வர உள்ளார். மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவும் அங்கு சென்று கொண்டுள்ளார்.

இச்சோக சம்பவத்தை அடுத்து ஒடிஷாவில் இன்று துக்க தினம் அனுசரிக்கப்படுகிறது. அரசு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன