இந்தியா

14 ஆண்டுகளில் 4 பேருக்கு மட்டுமே தூக்குத் தண்டனை நிறைவேற்றம்

14 ஆண்டுகளில் 4 பேருக்கு மட்டுமே தூக்குத் தண்டனை நிறைவேற்றம்

webteam

இந்தியாவில் கடந்த 14 ஆண்டுகளில் 4 பேருக்கு மட்டுமே தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது

இந்தியாவில் அரிதினும் அரிதான குற்றங்களுக்கு மட்டுமே மரண தண்டனை விதிக்கப்படுகிறது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலேயே இருந்த இச்சட்டம், சுதந்திரத்திற்கு பிறகும் தொடருகிறது. எனினும் இதுவரை எத்தனை பேருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்பது தொடர்பாக முரண்பட்ட தரவுகளே உள்ளன.

சுதந்திரத்திற்கு பின்பு 52 பேருக்கு மட்டுமே தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டதாக அரசின் தரவுகள் தெரிவித்தாலும், பி.யூ.சி.எல். மற்றும் டெல்லி சட்டப் பல்கலைக்கழகத்தின் தரவுகளும் வேறுபடுகின்றன. 1953 முதல் 1963 வரையிலான 10 ஆண்டுகளில் மட்டும் 1,422 பேருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டதாக பி.யூ.சி.எல்- அமைப்பு கூறுகிறது. அதேநேரத்தில் சுதந்திரத்திற்கு பிறகு 755 பேருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டதாக டெல்லி சட்டப் பல்கலைக்கழகம் தெரிவிக்கிறது.

உலகின் பெரும்பாலான நாடுகள் மரண தண்டனையை கைவிட்டபோதிலும், இந்தியாவில் அது தொடர்கிறது. மரண தண்டனையை கைவிடுவது தொடர்பாக ஐக்கிய நாடுகள் அவையில் 2015-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தீர்மானத்துக்கு எதிராக இந்தியா வாக்களித்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு, இரு வழிமுறைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. குற்றம்சாட்டப்பட்ட நபர் கழுத்தில் கயிறை மாட்டி தூக்கிலிடப்படுவார் அல்லது சுட்டுக் கொல்லப்படுவார். எனினும், இந்திய தண்டனைச் சட்டத்தின்படி தூக்கிலிடும் முறையே கடைப்பிடிக்கப்படுகிறது.

சுதந்திர இந்தியாவில் முதலில் தூக்கிலிடப்பட்டவர்கள் நாதுராம் கோட்சே மற்றும் நரேன் டி ஆப்தே. காந்தியை சுட்டுக் கொன்ற வழக்கில் இருவருக்கும் 1949 ஆம் ஆண்டு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது. கடைசியாக 2015-ல் மும்பை தொடர் வெடிகுண்டு தாக்குதல் வழக்கில் யாகூப் மேனன் தூக்கிலிடப்பட்டார்.

2000 முதல் 2014 ஆம் ஆண்டு வரையிலான காலத்தில், பல்வேறு விசாரணை நீதிமன்றங்கள் 1,810 பேருக்கு மரண தண்டனை விதித்தன. மேல்முறையீட்டு வழக்குகளில் சுமார் 440 பேர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட நிலையில், பாதிக்கும் மேற்பட்டோரின் தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

இந்தியாவில் கடந்த 1‌4 ஆண்டுகளில் 4 பேருக்கு மட்டுமே தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாக கொல்கத்தாவைச் சேர்ந்த தனஞ்செய் சட்டர்ஜி 2004 ஆம் ஆண்டு தூக்கிலிடப்பட்டார். மும்பை தாக்குதல் வழக்கில் பாகிஸ்தானைச் சேர்ந்த முகம்மது அஜ்மல் கசாப் 2012 ஆம் ஆண்டு தூக்கிலிடப்பட்டார். 2013-ல் நாடாளுமன்ற தாக்குதலில் மூளையாக செயல்பட்ட காஷ்மீரைச் சேர்ந்த அப்சல் குரு தூக்கிலிடப்பட்டார். கடைசியாக மும்பை தொடர் குண்டு வெடிப்பில் குற்றவாளியான யாகூப் மேனன் 2015-ல் தூக்கிலிடப்பட்டார்.

தமிழகத்தை பொறுத்தவரையில், தொடர் கொலையில் ஈடுபட்ட வழக்கில் குற்றவாளியான ஆட்டோ சங்கர் 1995 ஆம் ஆண்டு சேலம் மத்திய சிறையில் தூக்கிலிடப்பட்டார். தூக்குத் தண்டனை தொடர்பான தற்போதைய வழிகாட்டுதல்கள் பெரும்பாலும், குற்றவாளிகளுக்கு ஆதரவாக இருப்பதாலேயே, மத்திய அரசு புதிய மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.