இந்தியா

பயணியின் பைக்குள் ஊர்ந்த விஷப் பாம்பு: விமான நிலையத்தில் திடீர் பரபரப்பு!

webteam

அபுதாபி செல்ல வேண்டிய பயணியின் ஹேண்ட் லக்கேஜில் விஷப் பாம்பு இருந்ததால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

கொச்சி விமான நிலையத்தில் இருந்து அபுதாபிக்கு தினமும் ஏர் இண்டியா எக்ஸ்பிரஸ் விமானம் சென்று வருகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த விமானம் வழக்கம் போல புறப்படத் தயாராக இருந்தது. அபுதாபி செல்ல வேண்டிய பயணிகளின் உடமைகள் சோதனைச் செய்யப்பட்டுக் கொண்டிருந்தன.

அப்போது ஒரு ஹேண்ட் லக்கேஜை ஸ்கேன் செய்த மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் அதற்குள் ஏதோ ஒன்று ஊர்வ தைக் கண்டனர். பின்னர் மீண்டும் அந்த பேக்கை ஸ்கேன் செய்து பார்த்தனர். அப்போதும் ஏதோ ஒன்று ஊர்ந்து சென்றது தெரிய வந்தது. 

அந்த பேக், பாலக்காடைச் சேர்ந்த சுனில் என்ற பயணிக்குரியது என்பது தெரியவந்தது. அவர் செக்கிங் முடிந்து பேக்கை எடுக்க வந்தார். அப்போது பாதுகாப்புப் படையினர் பேக்கை பிரித்து சோதனை செய்ய வேண்டும் என்றனர். சரி என்றார் அவர். ஒவ்வொன்றாக வெளியே எடுத்தனர். அப்போது ஒரு பிளாஸ்டிக் பை இருந்தது தெரிந்தது.

அதில் உருளைக்கிழங்கு இருக்கிறது என்று தெரிவித்தார் சுனில். பாதுகாப்புப்படையினர் அதில் கை வைக்கும்போது உள்ளே ஏதோ ஊர்வதைக் கண்டனர். பின்னர் அதை பிரித்தால், கருப்பு நிறத்தில் குட்டிப் பாம்பு ஒன்று, கெத்தாக வெளியே தலையை நீட்டி பார்த்தது. இதைக் கண்டு பயணி சுனில் உட்பட அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அது அதிக விஷம் கொண்ட பாம்பு என்பது தெரிய வந்தது.

(அந்த பாம்பு...)

பின்னர், பாம்பை பிடித்த, பாதுகாப்புப் படையினர் சுனிலை போலீசார் ஒப்படைத்தனர். இதனால் அவர் 4.55 மணிக்கு செல்ல வேண்டிய விமானத்தில் அனுமதிக்கப்படவில்லை.

’வீட்டு பக்கத்தில் இருந்த விவசாயி ஒருவரிடம் உருளைக்கிழங்கு வாங்கினேன். அபுதாபிக்கு கொண்டு செல்கிறேன் என்பதால், அதை ஒரு பைக்குள் போட்டுக் கட்டித் தந்தார். அதற்குள் எப்படியோ பாம்பு இருந்திருக்கிறது. மற்றபடி பாம்புக்கும் எனக்கும் சம்பந்தமில்லை’என்று தெரிவித்தார் சுனில். பின்னர் அவரை போலீசார் விடுவித்தனர்.