சுகாதார நிலையத்துக்குள் பாம்பு புகுந்ததால், நோயாளிகள் அலறியடித்து ஓடிய சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் பைரூச்சில் உள்ள கிராம சுகாதார நிலையத்தில் வழக்கம் போல சிகிச்சை பெறுவதற்காக ஏராளமான நோயாளிகள் காத்திருந்தனர். அப்போது ஐந்தரை அடி நீளம் கொண்ட அந்த பாம்பு மருத்துவமனைக்குள் புகுந்தது. இதைக் கண்ட பெண்களும், குழந்தைகளும் அலறியடித்தபடி அங்கிருந்து ஓடியதால், மருத்துவமனையில் பதற்றம் ஏற்பட்டது.
இதனையடுத்து பாம்பு பிடிப்பதில் பயிற்சி பெற்றவர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்து பாம்பை பிடித்துச் சென்று வனப்பகுதிக்குள் விட்டனர். அருகில் இருந்த புதர் மண்டிய பகுதிகளில் நச்சுத் தன்மை கொண்ட பாம்புகளும், தேள்களும் அதிக அளவில் வசிப்பதால், அவ்வப்போது அவை மருத்துவமனைக்குள் புகுந்து விடுவதாக கூறப்படுகிறது. எனவே, மருத்துவமனை அருகில் உள்ள புதர்களை உடனடியாக அகற்ற வேண்டும் என நோயாளிகளும், அப்பகுதி மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.