இந்தியா

“பசுக்களை கடத்தினால் கொல்லப்படுவீர்கள்”: பாஜக எம்.எல்.ஏ. மிரட்டல்

rajakannan

பசுக்களை கடத்துபவர்கள் கொல்லப்படுவார்கள் என்று ராஜஸ்தான் மாநில பாஜக எம்.எல்.ஏ மிரட்டல் விடுத்துள்ளார்.

பசுக்களை ஏற்றிச் சென்றதாகவும், மாட்டிறைச்சி கொண்டு சென்றதாகவும் கூறி ராஜஸ்தான், உத்திரப் பிரதேசம், ஜார்க்கண்ட் உள்ளிட்ட வட மாநிலங்களில் தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் சிலர் தொடர்ந்து வன்முறை சம்பவத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுபோன்ற சம்பவங்களில் ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டத்தில் இந்த ஆண்டில் மட்டும் இரண்டு முஸ்லீம்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பசுக்களை சட்டவிரோதமாக ஏற்றிச் சென்றதாக கூறி அல்வார் மாவட்டத்தில் ஒருவர் மீது தாக்குதல் நடைபெற்றுள்ளது. ஹரியானா மாவட்டத்தை சிலர் வாகனங்களில் பசுக்களை ஏற்றி அல்வார் மாவட்டம் வழியாக சென்றுள்ளனர். தகவல் அறிந்த காவல்துறையில் வாகனத்தை பிடிக்க முயன்றுள்ளனர். ஆனால், தடுப்புகளை தாண்டி வாகனம் நிற்காமல் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து, வாகனத்தை வழிமறித்த ஒரு கும்பல் அதில் இருந்த மூன்று பேர் மீது தாக்குதல் நடத்த முயன்றது. அதில் இரண்டு பேர் தப்பி செல்ல, ஜாகிர் கான்(46) என்பவர் மட்டும் சிக்கிக் கொண்டார். அவர் மீது அந்த கும்பல் சரமாரியாக தாக்குதல் நடத்தியது. போலீசார் அந்த இடத்திற்கு வந்து அவரை கைது செய்தனர். இருப்பினும் ஜாகிர் கான் படுகாயம் அடைந்திருந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வாகனத்தில் இருந்த 8 பசுக்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அதில் இரண்டு பசுக்கள் இறந்த நிலையில் இருந்தது.

இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அப்பகுதி பாஜக எம்.எல்.ஏ. கியன் தேவ் அஹுஜா, பசுக்களை கடத்தினாலோ, கொன்றாலோ அவர்கள் கொல்லப்படுவீர்கள் என்று கூறினார். மேலும், வாகனம் கவிழ்ந்து விழுந்ததால்தான் அவருக்கு காயம் ஏற்பட்டதாகவும், யாரும் தாக்குதலில் ஈடுபடவில்லை என்றும் எம்.எல்.ஏ. தெரிவித்தார். பாஜக எம்.எல்.ஏவின் பேச்சுக்கு அம்மாநில எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.