இந்தியா

‘டிகிரி முடிக்கவில்லை’ - வேட்புமனுவில் குறிப்பிட்ட ஸ்மிரிதி இரானி

webteam

தான் இளங்கலை பட்டத்தை படித்து முடிக்கவில்லை என மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி தனது வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய ஜவுளித்துறை அமைச்சரும், பாஜக நிர்வாகியும் ஆன ஸ்மிரிதி இரானி, இந்த மக்களவைத் தேர்தலில் உத்தரப்பிரதேசத்தின் அமேதி தொகுதியில் போட்டியிடுகிறார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை எதிர்த்து அவர் களமிறக்கப்பட்டுள்ளார். கடந்த 2014ஆம் ஆண்டு அவர் ராகுல் காந்திக்கு எதிராக இதே தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். பின்னர் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு, மத்திய அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

கடந்த முறை அவர் தேர்தலில் போட்டியிடும் போது தாக்கல் செய்திருந்த வேட்புமனுவில் பி.ஏ அல்லது பி.காம் என்ற தகவலை தெரிவித்திருந்தார். ஆனால் அவர் இளங்கலை படிப்பை முடிக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகளையும், விமர்சனங்களையும் காங்கிரஸ் கட்சியினர் வைத்திருந்தனர். இந்நிலையில் இந்த முறை அமேதி தொகுதியில் நேற்று வேட்புமனு தாக்கல் செய்துள்ள ஸ்மிரிதி, பி.காம் படிப்பை மூன்று ஆண்டுகள் முடிக்கவில்லை என தெளிவாக குறிப்பிட்டுள்ளார். மேலும் தனது சொத்து மதிப்பு ரூ.4.71 கோடி எனவும் தெரிவித்துள்ளார். இருப்பினும் தவறான தகவலை கூறி அவர் மத்திய அமைச்சராக இருந்ததாக காங்கிரஸார் குற்றச்சாட்டுகளை வைத்துள்ளனர்.