மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் கன மழையால் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்படும் இரைச்சல்பாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அதன் தண்ணீர் செல்லும் வழித்தடங்களில் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் நிற்கவோ, புகைப்படம் எடுக்கவோ தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழக கேரள எல்லையை இணைக்கும் குமுளி மலைப்பாதையில் இரைச்சல்பாலம் பகுதி உள்ளது. மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள இந்த இரைச்சல்பாலம் வழியேதான் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தமிழக குடிநீருக்கான தண்ணீர் திறந்து விடப்படுகிறது. வழக்கமாக இங்கு பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து செல்வதும் புகைப்படங்கள் எடுப்பதும் வழக்கமாக உள்ளது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கன மழையால், மலைப்பகுதியின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் மழை நீர் இரைச்சல்பாலத்தில் கலக்கிறது. இதனால் இரைச்சல்பாலம் வழியே தமிழக குடிநீருக்காக விநாடிக்கு 218 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டாலும், மழை நீர் கலப்பதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மழை இன்னும் வலுக்கும்பட்சத்தில் இதில் வெள்ளம் அதிகமாக வரும் எனவும், எவ்வளவு தண்ணீர் வரும் என கணக்கிட முடியாத சூழலால், இரைச்சல்பாலம் மட்டுமின்றி இந்த தண்ணீர் செல்லும் முல்லைப்பெரியாறின் வழித்தடங்களின் கரைகளில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் செல்லவும், புகைப்படம் எடுக்கவும் வனத்துறை தடை விதித்துள்ளது. ஆற்றங்கரையோரங்களில் அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்கவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, பலத்த மழை காரணமாக கேரள மாநிலம் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. பல்வேறு இடங்களில் மரங்கள் விழுந்துள்ளன. சாலைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. பாலக்காட்டில் மண் சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ள பாதிப்புகளை தொடர்ந்து மாநிலமெங்கும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இரு நாட்களுக்கு மழை தொடரும் என வானிலை மையம் எச்சரித்துள்ள நிலையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் உஷாராக இருக்குமாறு முதல்வர் பினராயி விஜயன் அறிவுறுத்தியுள்ளார். பேரிடர் மீட்புப் படையினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.