இந்தியா

காஷ்மீரில் இந்திய ராணுவம் தாக்குதல் : 6 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

webteam

ஜம்மு-காஷ்மீரில் இந்திய ராணுவப் படையில் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 6 தீவிர வாதிகள் கொல்லப்பட்டனர். 

கடந்த 20ஆம் தேதி காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் தீவிரவாதிகள் சிலர் பதுங்கியிருப்பதாக இந்திய ராணுவத்தினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த இடத்திற்கு சென்ற ராணுவத்தினர், தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதை கண்டுபிடித்தனர். ராணுவத்தினரை கண்டதும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். பதிலுக்கு ராணுவப்படையினரும் தாக்குதல் நடத்தினர். இந்த மோதலில் 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதேசமயம் ராணுவ வீரர் ஒருவரும் மரணம் அடைந்தார். மேலும் 3 வீரர்கள் காயமடைந்தனர்.

இந்நிலையில் ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்திவிட்டு தப்பிய தீவிரவாதிகள் அனந்த்நாக் மாவட்டத்தில் பதுங்கியிருப்பதாக நேற்றிரவு இந்திய ராணுவத்தினருக்கு தகவல் கிடைத்தது. தகவலையடுத்து திட்டமிட்ட ராணுவத்தினர், இன்று அதிகாலை தீவிரவாதிகள் பதுங்கியிருந்த பிஜ்பெஹரா வனப்பகுதியை சுற்றி வளைத்தனர். இருதரப்பிற்கும் இடையே துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இதில் 6 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். சோபியான் தாக்குதலில் இந்திய வீரர் கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.