இந்தியா

சீதாராம் யெச்சூரி காஷ்மீர் செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி 

webteam

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் சீதாராம் யெச்சூரி காஷ்மீர் செல்ல உச்சநீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. 

காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது. அத்துடன் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்டது. காஷ்மீர் விவகாரம் தொடர்பாக வழக்கறிஞர் எம்.எல்.சர்மா, தேசிய மாநாட்டு கட்சி எம்பி முகமது அக்பர் லோன், ஓய்வு பெற்ற நீதிபதி ஹஸ்னைன் மசூதி ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். 

இந்நிலையில் இன்று காஷ்மீர் தொடர்பான வழக்கை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதி எஸ்.ஏ.பாப்டே மற்றும் நீதிபதி அப்துல் நசீர் ஆகியவர்கள் அடங்கிய அமர்வு விசாரித்தது. இந்த விசாரணையின் போது தலைமை நீதிபதி, “ஜம்மு-காஷ்மீருக்கு பொதுமக்கள் செல்ல அனுமதி வழங்க வேண்டும்” எனத் தெரிவித்தார். இதற்கு அரசு வழக்கறிஞர் துஷார் மேத்தா, “பொது மக்கள் அங்கு செல்ல அனுமதித்தால் காஷ்மீரில் அமைதியான சூழலுக்கு ஆபத்து ஏற்படும்” எனத் தெரிவித்தார். 

இதற்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், “காஷ்மீர் செல்லும் தலைவர்கள் அரசியல் சார்ந்த பயணத்தை மேற்கொள்ள கூடாது” எனத் தெரிவித்தார். அத்துடன் இந்த அமர்வு முகமது அலீம் சையத், காஷ்மீரின் அனந்தனாக் பகுதிக்கு செல்ல அனுமதியளித்தனர். அதேபோல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் சீதாராம் யெச்சூரி காஷ்மீர் சென்று அவரது கட்சியின் தலைவர் யுசஃப் தாரிகாமியை சந்திக்க உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.