ஏற்கெனவே 25 பேர் உயிரிழந்த டெல்லி சர் கங்கா ராம் மருத்துவமனையில் மீண்டும் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
தலைநகர் டெல்லி கொரோனாவின் பிடியில் சிக்கி தத்தளித்துக் கொண்டிருக்கிறது. அங்குள்ள பல மருத்துவமனைகளில் தீவிரமான பாதிப்பில் உள்ள கொரோனா நோயாளிகளுக்கு தேவையான ஆக்சிஜன் கிடைப்பதில் நெருக்கடி தொடர்கிறது. கடந்த 23-ம் தேதி அன்று டெல்லி ராஜேந்திரா நகரில் அமைந்துள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 25 கொரோனா நோயாளிகள் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்தது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் அதே, சர் கங்கா ராம் மருத்துவமனையில் மீண்டும் ஆக்சிஜனுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சர் கங்கா ராம் மருத்துவமனை தெரிவித்துள்ள தகவலை ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
சர் கங்கா ராம் மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் கூறுகையில், ‘’எங்களிடம் 104 ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் உள்ளன. இது எமெர்ஜென்சி வார்டில் இருந்து ஐசியு வார்டுக்கும், சாதாரண வார்டிலிருந்து ஐசியு வார்டுக்கும் மாற்றப்படும் தீவிரமான பாதிப்பில் உள்ள நோயாளிகளின் பயன்பாட்டுக்காக உள்ளது.
இது அடிக்கடி நிகழ்கிறது. எங்களிடமிருக்கும் அனைத்து 104 சிலிண்டர்களும் அவசரகால நிரப்பலுக்காக 3 நாட்களாக 3 இடங்களுக்கு அனுப்பப்பட்டன. ஆனால் ஒரு பயனுமில்லை. தற்போது மருத்துவமனை ஆக்சிஜனுக்காக பிச்சை மற்றும் கடனுக்கு எடுக்கும் நிலையில் உள்ளது. இது ஒரு தீவிரமான நெருக்கடி நிலை. மருத்துவமனை இரண்டு சிலிண்டர்களை ஏற்பாடு செய்துள்ளது. ஆனால் அவை விரைவாக தீரப்போகின்றன’’ என்று தெரிவித்துள்ளது.