rahul gandhi rahul gandhi x
இந்தியா

SIR சர்ச்சை| ”ஞானேஷ் குமார் அப்ரூவராகி மோடி மீது விசாரணை வேண்டும்..” - ராகுல் காந்தி!

பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர் அமித் ஷா மீது உரிய விசாரணை நடத்தப்பட வேண்டுமென மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

Rishan Vengai

SIR சர்ச்சை விவகாரத்தில் வாக்குத் திருட்டு நிரூபிக்கப்பட்டது என்றும், ஞானேஷ் குமார் அப்ரூவராகி, மோடி-அமித் ஷா மீது விசாரணை நடத்த வேண்டும் என்றும் ராகுல் காந்தி வலியுறுத்துகிறார்.

வாக்காளர் பட்டியலில் தகுதியற்றவர்கள், இறந்தவர்கள், இடம் மாறியவர்கள் மற்றும் இரட்டைப் பதிவுகள் உள்ளிட்டவற்றை கண்டறிந்து பட்டியலைத் திருத்துவதற்காக Special Intensive Revision எனப்படும் SIR நடவடிக்கையை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. ஆனால், இந்த நடவடிக்கையால் தகுதியான வாக்காளர்களின் பெயர்களும் நீக்கப்படக்கூடும் என்றும், SIR நடைமுறையில் போதிய வெளிப்படைத்தன்மை இல்லை என்றும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன.

ஞானேஷ் குமார்

இந்த நிலையில், தேர்தல் ஆணையத்தில் உள்ள மூன்று தேர்தல் ஆணையர்களில் சுக்பீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகிய இருவரும், கடந்த 10 மாதங்களில் பல்வேறு முடிவுகள் தொடர்பாக குறைந்தது 14 முறை ஆட்சேபனை தெரிவித்ததாக இன்று வெளியான தகவல் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. வாக்காளர் பெயர்களைச் சேர்ப்பது, நீக்குவது, மீண்டும் சேர்ப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் தொடர்பாக அவர்கள் கேள்வி எழுப்பியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

election commission

இந்தசூழலில் இவ்விவகாரம் தொடர்பாக பாஜக மீது தொடர்ந்து விமர்சனங்களை வைத்துவரும் ராகுல்காந்தி, வாக்குத்திருட்டு நடந்த்வருவதை நான் தொடர்ந்து பல ஆண்டுகளாக கூறிவருகிறேன், தற்போது அது நிரூபனமாகியுள்ளது என்றும், தலைமை தேர்தல் ஆணையர் அப்ரூவராக வேண்டும் என்றும், மோடி மற்றும் அமித்ஷா மீது விசாரணை வேண்டும் என்றும் கடுமையான கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கும் ராகுல் காந்தி, “கடந்த மூன்று ஆண்டுகளாக நான் வாக்குத் திருட்டை அம்பலப்படுத்தி வருகிறேன். இப்போது, ​​தேர்தல் ஆணையர்களே அதை ஒப்புக்கொண்டு உண்மையை வெளிச்சத்திற்குக் கொண்டு வருகின்றனர். ஞானேஷ் குமார் தேசத்துரோகம் இழைத்துள்ளார். அவர் உடனடியாகப் பதவி விலகி, அரசுத் தரப்பு சாட்சியாக மாற வேண்டும். வாக்குத் திருட்டுச் சதி தொடர்பாக நரேந்திர மோடி மற்றும் அமித் ஷா மீது முழுமையான விசாரணை நடத்தப்படவேண்டும்” என பதிவிட்டுள்ளார்.

மேலும், “வாக்குரிமையே இந்திய ஜனநாயகத்தின் அடித்தளம். வாக்குரிமையிலிருந்தே நமது அரசியலமைப்பின் ஆற்றல், சட்டங்களின் அதிகாரம் மற்றும் பொது நிறுவனங்களின் சட்டபூர்வத் தன்மை ஆகியவை உருவாகின்றன. இந்தச் சங்கிலித்தொடரே நவீன இந்தியாவை வரையறுக்கிறது. இன்று இந்தச் சங்கிலி உடைக்கப்பட்டுள்ளது; இந்தியாவில் இதற்கு முன் இதுபோன்று ஒருபோதும் நிகழ்ந்ததில்லை. வாக்குரிமையைச் சிதைப்பதன் மூலம், இந்த அரசும் தேர்தல் ஆணையமும் ஒவ்வொரு இந்தியரின் கருத்து வெளிப்பாட்டின் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளன. திருடப்பட்ட வாக்குகளின் பலத்தில் இந்த அரசு செய்துள்ள அனைத்தும் சட்டவிரோதமானவை. 'வாக்குத் திருட்டு' மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் வகிக்கும் பதவி சட்டவிரோதமானது; அத்தகைய உறுப்பினரின் ஆதரவுடன் நிறைவேற்றப்படும் ஒவ்வொரு சட்டமும் சட்டவிரோதமானதே” என்றும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.