மம்தா - அபிஜித் - ஸ்டாலின் ANI
இந்தியா

எஸ்.ஐ.ஆர் | ஸ்டாலின், மம்தா தோல்வி.. சந்தேகம் கிளப்பிய அபிஜித் திப்கே!!

வாக்காளர் பதிவுகளை நீக்குவதற்கும், தேர்தல் முறைகேடுகளுக்கும் ஞானேஷ் குமார் அனுமதி அளித்ததாகக் குற்றம் சாட்டிய திப்கே, தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலகாவிட்டால் நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.

Premkumar S

SIR எனப்படும் சிறப்பு வாக்காளர் பட்டியல் தீவிரத் திருத்தம் தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக வெளியான தகவல், அரசியல் வட்டாரத்தில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்ட தகவலின்படி, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் மற்ற ஆணையர்களான, சுக்பீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகிய இருவரிடம், கடந்த 10 மாதங்களில் பல்வேறு முடிவுகள் தொடர்பாக குறைந்தது 14 முறை ஆட்சேபனை தெரிவித்திருந்ததுடன், அவர் ரகசியமாக செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Gyanesh kumar

இதையடுத்துத்து, SIR நடவடிக்கையால் வாக்காளர் பட்டியலில் பெரும் குளறுபடிகள் ஏற்பட்டதாகவும், நீதிமன்ற உத்தரவுகளும் புறக்கணிக்கப்பட்டதாகவும் கூறி, தேசிய கட்சிகள் மற்றும் மாநில கட்சிகள் தலைமை தேர்தல் ஆணையரை நீக்கி, SIR நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என கோருகின்றன.

இந்தச்சூழலில் தான், இந்த விவகாரம் குறித்துப் பேசியுள்ள கரப்பான் ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் திப்கே, தமிழ்நாட்டில் முன்னாள் முதல்வர் ஸ்டாலின் தோல்வி மற்றும் மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தோல்வி குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசியிருக்கும் அபிஜித் திப்கே, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். குறிப்பாக, வாக்காளர் பட்டியலில் பெயர்களை நீக்குவது மற்றும் தேர்தல் நடைமுறைகளில் முறைகேடுகள் நடைபெறுவதாக அவர் குற்றம்சாட்டினார். மேலும், வாக்களிக்கும் உரிமை ஜனநாயகத்தின் அடிப்படையான உரிமை என்றும், யார் வாக்களிக்கலாம் என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் தவறாகப் பயன்படுத்தப்படுவதாகவும் அவர் விமர்சித்தார். ஞானேஷ் குமார் பதவி விலகாவிட்டால், டெல்லி மட்டுமின்றி நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என்றும் அபிஜித் திப்கே எச்சரித்துள்ளார்.

அபிஜித் திப்கே

தொடர்ந்து பேசிய அவர், ”எஸ்.ஐ.ஆர். பெயரில் மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின் தொகுதியில் இருந்து 50,000 வாக்குகள் நீக்கப்பட்டன; அவர் சுமார் 15,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். மு.க. ஸ்டாலினின் தொகுதியில் 1 லட்சம் வாக்குகள் நீக்கப்பட்டன; அவர் சுமார் 8,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இவ்வாறு, பாஜகவை தீவிரமாக எதிர்த்த ஸ்டாலின், மம்தா ஆகியோர் அடுத்தடுத்து தோற்கடிக்கப்பட்டுள்ளனர். பாஜகவை எதிர்த்தவர்கள் அடுத்தடுத்து தோற்கடிக்கப்பட்டது எதேச்சையானது அல்ல. பலம் வாய்ந்த மாநில கட்சிகளை அடுத்தடுத்து தோற்கடிப்பதே பாஜகவின் திட்டமாக இருந்தது எனக் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அதேசமயம், தனக்கு எந்தக் கட்சியின் மீது பற்று இல்லை எனக் கூறிய அவர், ஓர் ஜனநாயகத்தில், ஒட்டுமொத்த எதிர்க்கட்சியையும் ஒழித்துவிட்டால், அதை இன்னும் ஜனநாயகம் என்று அழைக்க முடியுமா? எனவும் கேள்வி எழுப்பியிருக்கிறார்.