இந்தியா

காதலர் தினத்தன்று ‘சிங்கிள்ஸ்’க்கு இலவச டீ !

காதலர் தினத்தன்று ‘சிங்கிள்ஸ்’க்கு இலவச டீ !

webteam

பிப்ரவரி என்றாலே, பலருக்கும் சட்டென்று தோன்றுவது காதலர் தினம். பிப்ரவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் இந்தத் தினத்தை கொண்டாடி வருகிறார்கள் காதலர்கள். ஒவ்வொரு ஆண்டும் இந்த பிப்ரவரி மாதத்தில் அவரவர் தங்களின் காதலை வெளிப்படுத்த வேண்டி காத்து கொண்டிருப்பார்கள். அதற்காக முன்கூட்டியே ஒரு திட்டம் வைத்திருப்பார்கள். இந்த நாள் ஏதோ இளம் காதல் ஜோடிகளுக்கான நாள் எனப் பலர் தவறாக நினைத்து கொண்டுள்ளனர்.
 


ஆனால் அப்படியல்ல; முதுமையான காலத்திலும் மறக்க  முடியாத இளம்வயது பசுமை காதல் நினைவுகளை மனத்தில் தாங்கிக் கொண்டிருப்பவர்களுக்கும் இந்த நாள் ஒரு இனிமையான நாள்தான். இந்த நாளின் அடிப்படை என்பது அன்புதான். ஆனாலும் சமூக வளைதளங்களில் ‘சிங்கிள்ஸ்’ குரூப் இந்த நாளை மீம்ஸ் போட்டு கலாய்த்துவருகின்றன. அவர்கள் மேலும்  சிங்கிளாக இருப்பது ஒரு தனி கெத்து என்றும் அது ஒரு விதமான சுகம் என்றும் கூறி காதலிப்பவர்களை கலாய்த்து வருகிறார்கள். ஒவ்வொரு காதலர் தினத்திற்கும் ‘சிங்கிள்ஸ்’குரூப்கள் காதலர்களை கலாய்த்து மகிழ்ச்சியாக தங்களின் மாஸை காண்பித்து வருகின்றனர். 

இந்நிலையில் இந்த காதலர் தினத்திற்கு அகமதாபாத்திலுள்ள  ‘எம்பிஏ டீ ஸ்டால்’ ஒரு புது முயற்சியை எடுத்துள்ளது. அதாவது இந்த காதலர் தினத்தன்று சிங்கிள்ஸ்களுக்கு இலவசமாக டீ வழங்கப்போவதாக அறிவித்துள்ளது. இதனை பேஸ்புக்கில் ஒரு நிகழ்வாக பதிவிட்டுள்ளார் இந்த கடையின் உரிமையாளர் பிரபுஃல் பில்லோர். அதன்படி காதலர் தினம் அன்று மாலை 7 மணி முதல் 10 மணி வரை இந்த இலவச டீ வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிரபுஃல் டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழுக்கு அளித்த பேட்டியில் “பொதுவாக காதலர் தினம் அன்று அனைத்து கடைகளும் காதலர்களை குறிவைத்தே ஏற்பாடுகளை செய்வார்கள். நாங்கள் இதிலிருந்து மாறுபட்டு சிங்கிள்ஸ்களும் இந்த நாளை கொண்டாடுவதற்காக இலவச டீயை தரத் திட்டமிட்டோம். ஆனால் இதை நடைமுறைப்படுத்துவதில் தான் சிக்கல்கள் உள்ளன. ஏனென்றால், யார் சிங்கிள் என்று வரையறுப்பது கடினம்” என கூறியுள்ளார் அதன் உரிமையாளர்.

இந்த எம்பிஏ டீ ஸ்டாலில் 35 விதமான டீ வகைகள், ரொட்டிகள் ஆகியவை விற்கப்படுவது குறிப்பிடத்தக்கது.