பிரபல பாடகரான சோனு நிகாம், கடந்த ஏப்ரல் 25-26 தேதிகளில் பெங்களூருவில் நடைபெற்ற ஓர் இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது, ஓர் இளைஞர் நிகாமிடம் கன்னடத்தில் ஒரு பாடலைப் பாடுமாறு பலமுறை கேட்டுக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இது, அவருக்குக் கோபத்தைத் தூண்டியுள்ளது.
இதையடுத்து அவர், ”நான் கன்னடம் உட்பட பல்வேறு மொழிகளில் பாடியுள்ளேன். நான் கர்நாடகாவிற்கு வரும்போதெல்லாம், மிகுந்த அன்புடனும் மரியாதையுடனும் வருகிறேன். நீங்கள் அனைவரும் என்னை ஒரு குடும்பம் போல நடத்துகிறீர்கள். நீங்கள் கேட்கும் போதெல்லாம் நான் கன்னடப் பாடல்களைப் பாடுவேன். அந்த இளைஞன் பிறப்பதற்கு முன்பே நான் கன்னடத்தில் பாடி வருகிறேன். ஆனால், அவர் 'கன்னடம், கன்னடம்' என்று கத்திய விதம் எனக்குப் பிடிக்கவில்லை. இதுபோன்ற நடத்தையால்தான் பஹல்காம் தாக்குதல் போன்ற சம்பவங்கள் நடக்கின்றன” எனத் தெரிவித்துள்ளார்.
இந்தக் கருத்துகள் திரைப்பட தயாரிப்பாளர் கார்த்திக் கவுடா மற்றும் கன்னட ஆர்வலர் எஸ்.ஆர்.கோவிந்து உட்பட பலரிடமிருந்தும் சீற்றத்தையும் கண்டனத்தையும் தூண்டின. குறிப்பாக, நிகாமின் அறிக்கைகள் கன்னட சமூகத்தின் உணர்வுகளைப் புண்படுத்தியதாக கன்னட ஆதரவு அமைப்பான கர்நாடக ரக்ஷண வேதிகே, பெங்களூருவில் உள்ள அவலஹள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது.
“இந்த அறிக்கைகள் கர்நாடகாவில் உள்ள பல்வேறு மொழி பேசும் சமூகங்களிடையே வெறுப்பைத் தூண்டி, வன்முறையைத் தூண்டும். ஸ்ரீசோனு நிகாமின் அறிக்கையின் காணொளி வைரலாகி, மாநிலம் முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான கன்னடர்களிடையே பரவலான சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது" என்று புகாரில் கூறப்பட்டுள்ளது. புகாரின் அடிப்படையில், குழுக்களிடையே பகைமையை ஊக்குவித்தல், அவதூறு பரப்புதல் மற்றும் மத அல்லது மொழி உணர்வுகளை சீர்குலைத்தல் தொடர்பான பிரிவுகளின்கீழ் பாடகர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே பாடகர் நிகாம், “அவர்கள் கன்னடப் பாடலைக் கோரவில்லை. மாறாக, அச்சுறுத்தினர்” என இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்துள்ளார்.