பாஜக சார்பில் அலிநகர் தொகுதில் போட்டியிட்ட பாடகி மைதிலி தாகூர், பீகாரின் இளைய எம்.எல்.ஏவாக பதவியேற்க உள்ளார்.
243 சட்டப்பேரவை தொகுதிகளை உள்ளடக்கிய பீகார் மாநிலத்தில் நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாகக் தேர்தல் நடைபெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது. இதில் பெரும்பான்மையான தொகுதிகளை தேசிய ஜனநாயகக் கூட்டணி கைப்பற்றி, ஆட்சியை மீண்டும் தக்கவைக்கிறது. இந்த நிலையில், பாஜகவில் இணைந்த ஒரேநாளில், பிரபல பாடகி மைதிலி தாகூருக்கும் அக்கட்சி சீட் வழங்கியது. பாட்னாவில் மாநில பாஜக தலைவர் திலீப் ஜெய்ஸ்வால் முன்னிலையில், அக்டோபர் 14ஆம் தேதி பாஜகவில் அவர் முறையாக இணைந்தார். இதைத் தொடர்ந்து, அதற்கு அடுத்த நாளே (அக்.15), தர்பங்கா மாவட்டத்தின் அலிநகர் தொகுதியில் அவர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.
இவருடைய தொகுதியில் முதல்கட்டமாக நவம்பர் 6ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. தற்போது இந்த தேர்தலில் மைதிலி தாகூர் பெரிய அளவிலான வாக்கு எண்ணிக்கையில் வெற்றிபெற்றுள்ளார். 84915 வாக்குகள் பெற்றுள்ள அவர், தன்னை எதிர்த்து நின்ற ராஷ்டிரிய ஜனதா தள வேட்பாளரான பினோத் மிஸ்ராவை 11,730 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். இதன்மூலம், பாஜகவின் அடிப்படை உறுப்பினராகச் சேர்ந்த ஒரே மாதத்தில் எம்.எல்.ஏ. ஆகும் அதிர்ஷ்டம் மைதிலி தாகூருக்கு அடித்துள்ளது. முன்னதாக, 2005ஆம் ஆண்டு சுயேச்சை வேட்பாளர் 26 வயதான தௌசீப் ஆலமும், அதைத் தொடர்ந்து 2015ஆம் ஆண்டு ரகோபூரிலிருந்து 26 வயதில் ஆர்.ஜே.டி.யின் தேஜஸ்வி யாதவ் இளம் வேட்பாளர்கள் என்ற பெருமையைப் பெற்றிருந்தனர். தற்போது 25 வயதான மைதிலி தாகூர் அதை முறியடித்துள்ளார். இந்தி மற்றும் போஜ்புரி நிகழ்ச்சிகளுக்காக நாடு தழுவிய அளவில் அறியப்பட்டவர் மைதிலி தாகூர் ஆவார்.
ஜூலை 25, 2000 அன்று மதுபனியில் பிறந்த மைதிலி தாகூர், வேலைக்காக டெல்லியில் உள்ள நஜாஃப்கருக்கு குடிபெயர்ந்தது. ஒரு பாரம்பரிய பாடகரான அவரது தந்தை, குடும்பத்தை காப்பாற்ற இசையின் பக்கம் திரும்பினார். அவரே, மைதிலியின் வழிகாட்டியாகவும் ஆசிரியராகவும் பணியாற்றினார். அதன்பின்னர், மைதிலி இந்திய பாரம்பரிய இசை மற்றும் நாட்டுப்புற இசையில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.
பிரபலமான ரியாலிட்டி ஷோக்களால் முதலில் நிராகரிக்கப்பட்ட மைதிலி, பின்னர் படிப்படியாக புகழ் பெற ஆரம்பித்தார். மைதிலிக்கு 2021ஆம் ஆண்டில் சங்கீத நாடக அகாடமியால் உஸ்தாத் பிஸ்மில்லா கான் யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது, இது இந்தியாவில் இளம் கலைஞர்களுக்கான மதிப்புமிக்க அங்கீகாரமாகும். அவர், தனது பிரசாரத்தின்போது, அலிநகரை ’சீதாநகர்’ என மாற்றுவதாக தெரிவித்திருந்தார்.