இந்தியா

"சம்ஜா... புரிஞ்சுச்சா?"- விமான நிறுவனங்களை டேக் செய்து கோபப்பட்ட பாடகர் பென்னி தயாள்!

நிவேதா ஜெகராஜா

பிரபல பாடகர் பென்னி தயாள், விமான நிறுவனங்கள் எதுவும் இசைக்கருவிகளை சரியாக கையாள்வதில்லை என்றும், அதன்மீது குறைந்தபட்ச பராமரிப்பு கூட விமான ஊழியர்களால் காட்டப்படுவதில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக இன்ஸ்டாகிராமில் Vistara, Air India, Indigo, Air Asia India, Spice jet airlines, Akasa Air என அனைத்து விமான நிறுவனங்களையும் டேக் செய்து வீடியோ பகிர்ந்துள்ளார் பாடகர் பென்னி தயாள். அந்த வீடியோவில் அவர் பேசியுள்ளவை பின்வருமாறு:

“இந்தியாவின் அனைத்து விமான சேவைகளுக்கும் ஒரு சின்ன விஷயம் சொல்ல விரும்புகிறேன். ஒவ்வொரு இசைக்கலைஞரும், பணம் சம்பாதிக்க மிகக்கடுமையாக உழைக்கின்றார். அப்படியான அவர்களின் சம்பளத்துக்கு வித்திடுவது, நீங்கள் அவர்களின் இசைக்கருவிகளை எப்படி கையாள்கின்றீர்கள் என்பதை பொறுத்துதான் அமையும்.

ஒவ்வொரு முறையும் கான்செர்ட், இசை நிகழ்ச்சிகள் என பல்வேறு நாடுகளுக்கு இசைக்கலைஞர்கள் இந்தியாவுக்கும் உள்ளேயேயும், இந்தியாவிலிருந்தும் பயணிக்கின்றனர். அப்படி பயணிக்கும் அவர்களின் இசைக்கருவிகளை பாதுகாப்பாக கையாள வேண்டும் என்ற அக்கறை, இந்தியாவில் இண்டிகோ, விஸ்தாரா, ஏர் இந்தியா, ஸ்பைஸ் ஜெட் போன்ற எந்த விமான நிறுவனத்துக்குமே கொஞ்சம் கூட இருப்பதில்லை (இதை Zero Love or Zero Care என்று தன் வீடியோவில் குறிப்பிடுகிறார்). இதுபற்றி ஏராளமான இசைக்கலைஞர்கள் வீடியோக்கள் வழியாக குறையாக பகிர்ந்துள்ளனர். நானே அப்படிப்பட்ட பல வீடியோக்களை பார்த்துள்ளேன்.

இதுபோன்ற நிகழ்வுகள் எனக்கும்கூட நேரடியாக நடந்துள்ளது. விஸ்தாரா நிறுவன விமானத்தில் நான் பயணிக்கையில், என்னுடைய இரண்டு பைகளில் இருந்த அனைத்து கருவிகளும் 7 நாள் இடைவெளிக்குள் உடைந்த நிலையில் எனக்கு கிடைக்கப்பட்டன. அந்த உடைந்த பொருள்களுக்கு, நீங்கள்தான் பொறுப்பு. எனக்கு என்னுடைய பொருட்கள் வேண்டும். விஸ்தாராவின் பயணிகள் சேவை, மிக மிக மிக மோசமாக உள்ளது. இதேபோலதான் இண்டிகோவும். உங்களுக்கு இசைக்கலைஞர்கள் மீதும், அவர்களின் உணர்வுகள் மீதும் ஜீரோ என்ற அளவில்தான் அக்கறை உள்ளது. லக்கேஜை ஹேண்டில் செய்ய நீங்கள் நியமித்திருக்கும் நபர்களிடம், எதை எப்படி கையாள வேண்டும் என்றுகூட நீங்கள் சொல்லிக்கொடுப்பதில்லை. அப்படி நீங்கள் செய்யும் தவறுகளினால், மீண்டும் மீண்டும் எங்களுடைய கருவிகள் உடைந்த நிலையிலேயே எங்களுக்கு கிடைக்கிறது.

உங்கள் போக்குவரத்தை பயன்படுத்தி ஒவ்வொரு முறை ஒவ்வொருவர் தங்கள் கருவிகளை கொண்டு செல்லும்போதும், அது உங்களால் ஏதாவதொரு வகையில் உடைக்கப்பட்டு விடுவதை காணமுடிகிறது. ஆனால் நீங்களோ, அதற்கு கொஞ்சம் கூட பொறுப்பெடுத்துக்கொள்ள மாட்டேன் என உள்ளீர்கள். இப்படியான மனப்போக்கை, நிச்சயமாக ஏற்றுக்கொள்ளவே முடியாது.

ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு உங்கள் விமானத்தில் பயணிப்பவர்கள், இறுதியில் தங்கள் பொருள் உடைந்திருப்பதை பார்க்கவா விரும்புவார்கள்? தயவுசெய்து இப்படி செய்யாதீர்கள். உங்களை கெஞ்சி கேட்டுக்கொள்கிறேன்… தயவுசெய்து எங்கள் கருவிகளை உடைக்காதீர்கள். அவற்றை கொஞ்சமாவது அக்கறையுடன் கையாளுங்கள். அந்தக் கருவிகள் தான் எங்களுக்கு சாப்பாடு போடுகிறது. அதை இவ்வளவு அலட்சியமாகவும் மோசமாகவும் கையாளாதீர்கள். நான் சொல்வது உங்களுக்கு புரிகிறதா? (தமிழிலும் இந்தியிலும் புரிகிறதா என சற்று கோபத்துடன் வீடியோவில் கேட்டுள்ளார் பென்னி தயாள்)

ஒவ்வொரு முறையும் நாங்கள் (இசைக்கலைஞர்கள்) அனைத்து லக்கேஜூக்கும் உரிய வகையில் கட்டணம் செலுத்துகிறோம். அவற்றை ஒழுங்காக அடுக்கி, மிக மிக பாதுகாப்பாக அடுக்கி தருகிறோம். அதனால்… தயவு செய்து… தயவுசெய்து… கெஞ்சி கேட்கிறேன்... பொறுப்புடன் எங்கள் கருவிகளை கையாளுங்கள். கொஞ்சமாவது பொறுப்புடன் இருங்கள்” என கடுமையான குரலில் வேண்டுகோளாக முன்வைத்துள்ளார்.

பென்னி தயாலின் வீடியோவை இங்கு காணலாம்:

அவரது இந்த பதிவுக்கு பல இசைக்கலைஞர்கள் கமெண்ட் வழியே ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்கள் ஏதேனும் நடவடிக்கை எடுக்குமா, பதில் சொல்லுமா என்பதே தற்போது இசைக்கலைஞர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.