சைமன் வோங்க், இண்டிகோ எக்ஸ் தளம்
இந்தியா

“மன்னிச்சிடுங்க; வார்த்தை இல்லை”- விமான ரத்தால் சக ஊழியர்களின் திருமணத்தை மிஸ் செய்த தூதர் வருத்தம்!

இந்தியாவுக்கான சிங்கப்பூர் உயர் அதிகாரி ஒருவர், தனது ஊழியரின் திருமணத்தில் கலந்துகொள்ளாதது குறித்து வேதனை தெரிவித்துள்ளார். அவருடைய பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

Prakash J

இந்தியாவுக்கான சிங்கப்பூர் உயர் அதிகாரி ஒருவர், தனது ஊழியரின் திருமணத்தில் கலந்துகொள்ளாதது குறித்து வேதனை தெரிவித்துள்ளார். அவருடைய பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தின் புதிய பணி நேர வரம்பு விதிகளால் இண்டிகோ விமானச் சேவை, கடுமையாகப் பாதிப்பைச் சந்தித்துள்ளது. கடந்த மூன்று நாட்களில் நாடு முழுவதும் 500க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில், இன்று மட்டும் 400க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் சிக்கலை எதிர்கொண்டுள்ளனர். அவசரத் தேவைக்குக்கூட உடனே சொந்த ஊரோ, நாடோ செல்ல முடியாமல் சிலர் அவஸ்தைக்குள்ளாகி இருக்கின்றனர்.

இண்டிகோ விமானம்

இன்னும் சொல்லப்போனால் ஒடிசாவைச் சேர்ந்த திருமண ஜோடி ஒன்று, தன்னுடைய வரவேற்பு விழாவிற்கு சொந்த ஊருக்குச் செல்ல முடியாமல் விர்ச்சுவலாக (மெய்நிகராக) கலந்துகொண்ட நிகழ்வு அரங்கேறி உள்ளது. இதனால் பயணிகள் பலரும் பாதிப்படைந்திருக்கும் நிலையில், இதுகுறித்து அவர்கள் சமூக வலைதளங்களில் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில், இந்தியாவுக்கான சிங்கப்பூர் தூதர் ஒருவர், தனது ஊழியரின் திருமணத்தில் கலந்துகொள்ளாதது குறித்து வேதனை தெரிவித்துள்ளார். அவருடைய பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

சைமன் வோங்க் என்கிற அவர், தன்னிடம் பணிபுரியும் ஊழியர்களின் திருமணத்திற்கு டெல்லியிலிருந்து திகோர் செல்ல இண்டிகோ விமானத்தில் டிக்கெட் புக் செய்திருந்தார். ஆனால், கடந்த மூன்று நாட்களாக இண்டிகோ விமானச் சேவை பாதிப்பைச் சந்தித்துள்ள நிலையில், அவர் செல்ல வேண்டிய விமானமும் திடீரென ரத்து செய்யப்பட்டது. இதுகுறித்த தகவலை இண்டிகோ நிறுவனம், அவரது வாட்ஸ் அப்புக்கு அனுப்பியுள்ளது.

முன்னதாக, அவரது பயணம் குறித்து அதிகாலை 5.14 மணிக்கு உறுதிப்படுத்திய இண்டிகோ விமான நிறுவனம், அடுத்த சில நிமிடங்களில், அதாவது 5.34 மணிக்கு அவரது பயணம் ரத்தானது குறித்தும் தெரிவித்துள்ளது. அதற்காக மன்னிப்பு கேட்டுள்ள நிறுவனம், டிக்கெட்டின் முழுப் பணத்தையும் பெற்றுக் கொள்ள அறிவுறுத்தியுள்ளது. அதை, அப்படியே பகிர்ந்துள்ள அந்த உயர் அதிகாரி, அந்த திருமண நிகழ்வுக்கு வர முடியாததற்கு வருத்தம் தெரிவித்துள்ளார். அவரின் பதிவில், “இண்டிகோவால் சிக்கித் தவிக்கும் பல்லாயிரக்கணக்கான பயணிகளுடன் நானும் இணைந்தேன். தியோகருக்குச் செல்ல வேண்டிய எனது விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஷாதியில் கலந்துகொள்ள எனக்காகக் காத்திருக்கும் எனது இளம் ஊழியர்களிடம் எனது மனமார்ந்த மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகள் தெரியாமல் தவிக்கிறேன்" என அதில் பதிவிட்டுள்ளார்.