இந்தியா

`அதிக குழந்தைகள் பெற்றுக்கொண்டால் ஊதிய உயர்வு'- சிக்கிம் அரசின் அதிரடி முடிவு ஏன்?

PT

“சிக்கிம் மாநிலத்தில் குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் வகையில், அதிக குழந்தைகள் பெற்றுக் கொள்ளும் பெண்களுக்கு சிறப்பு ஊதிய உயர்வு வழங்கப்படும்” என அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவை பொறுத்தவரை, நம் நாட்டிலேயே ஒட்டுமொத்த குழந்தை பிறப்பு விகிதம் மிகவும் குறைவாக உள்ள மாநிலம் சிக்கிம்தான். இங்கு குழந்தை பிறப்பு விகிதம் 1.1 ஆக இருக்கிறது என ஆய்வில் தெரியவந்துள்ளது. இதை முன்னிலைக்குக் கொண்டுவரும் வகையில், பல புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார், அம்மாநில முதல்வர் பிரேம் சிங் தமங். இவரது தலைமையில் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சி ஆட்சி நடத்தி வருகிறது.

சிக்கிமில் குழந்தைகளின் பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் வகையில், அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டால் சிறப்பு ஊதிய உயர்வு வழங்கப்படும் என முதல்வர் பிரேம் சிங் தமங் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர், “அரசுத் துறையில் பணியாற்றும் பெண் ஊழியர்கள், 2வது குழந்தை பெற்றுக்கொண்டால் சிறப்பு ஊதிய உயர்வும், 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் இரண்டு ஊதிய உயர்வும் வழங்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார். மேலும் சிக்கிம் மக்கள், ஒன்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் பெற்றுக் கொண்டால் அவர்களுக்கு பல நிதி உதவிகள் வழங்கப்படும் என்றும், குழந்தைகள் பிறக்காத பெண்களுக்கு ஐவிஎஃப் முறையில் சிகிச்சை அளிக்கும் வசதியை அரசு மருத்துவமனைகளில் ஏற்படுத்தவும் அரசு முன்னெடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, மற்ற மாநில அரசுகள் அறிவிக்கும் முன்பே, சிக்கிமில் முதல் குழந்தை பெறும் அரசு பெண் ஊழியர்களுக்கு ஓராண்டு மகப்பேறு விடுமுறையும் தந்தைக்கு 30 நாள்கள் விடுமுறையும் அம்மாநில அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போதைய அறிவிப்பாலும் அங்குள்ள மக்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

- ஜெ.பிரகாஷ்