பாகிஸ்தானில் சிறுபான்மையினருக்கு மட்டுமல்ல, இஸ்லாமியர்களுக்கே பாதுகாப்பில்லை என்று அந்நாட்டின் பிரதமர் இம்ரான் கானின் கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் தெஹ்ரீக் இ இன்சாஃப் கட்சியின் தலைவராக இருக்கிறார் அந்நாட்டின் பிரதமர் இம்ரான் கான். இவர் கட்சியின் சார்பில், ஹைபர் பக்துங்கவா மாகாணத்தில் உள்ள பரிகோட் தொகுதி எம்.எல்.ஏவாக இருந்தவர் பல்தேவ் குமார் (43). சீக்கியரான இவர், கடந்த 12 ஆம் தேதி பஞ்சாப் மாநிலம் லூதியானாவுக்கு வந்துள்ளார். மூன்று மாத விசாவில் வந்துள்ள அவர், தனக்கும் தன் குடும்பத்தினருக்கும் இந்தியா, அரசியல் தஞ்சம் தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள் ளார்.
அவர் கூறும்போது, ’பாகிஸ்தானில் சிறுபான்மையினராக உள்ள இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள் மட்டுமல்ல, இஸ்லாமியர்களுக்கே பாதுகாப்பில்லை. பாகிஸ்தானில் கடும் சிரமங்களுக்கு இடையில் வசித்துவருகிறோம். சமீபத்தில் சீக்கிய மதக்குருவின் மகள் கடத்தப்பட்டு கட்டாய மதமாற்றம் செய்யப்பட்ட பின், அங்கு சிறுபான்மையினருக்குப் பாதுகாப் பில்லை என்பதை உணர்ந்துவிட்டேன். மதத்தலைவர்களே அங்கு மதிக்கப்படவில்லை என்கிறபோது, வேறு யார் என் பேச்சை கேட்பார்கள்? அதனால் இனி பாகிஸ்தான் திரும்ப மாட்டேன். இந்திய அரசு, எனக்கும் என் குடும்பத்தினருக்கும் அடைக்கலம் தரவேண்டும் என்று வேண்டுகோள் வைக்கிறேன். பிரதமர் மோடி எனக்கு அடைக்கலம் தருவார் என்று நம்புகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.