ஐஐடி கான்பூர் முன்னாள் மாணவரான சித்தார்த்தா சக்ஸேனா, தனது 26-ஆவது வயதில் ஒரேநாளில் சுமார் 8 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் தோராயமாக ₹77 கோடி) சம்பாதித்ததாகக் கூறி இணையத்தில் பேசுபொருளாகி உள்ளார்.
2019-இல் படிப்பை முடித்த சித்தார்த்தா சக்ஸேனா, மெஷின் லேர்னிங் (Machine Learning) துறையில் தனது திறனை வளர்த்துக் கொண்டார். Envestnet, Yodlee, Wadhwani AI, பின்லாந்தின் ஆல்டோ பல்கலைக்கழகம் மற்றும் ஜூமியோ கார்ப்பரேஷன் போன்ற முக்கிய நிறுவனங்களில் அவர் பணியாற்றினார். 2022ஆம் ஆண்டில், சித்தார்த்தா சக்ஸேனா தனது ஐஐடி கான்பூர் நண்பர்களான பிரத்யுஷ் ராய் மற்றும் சிர்செந்து சர்க்கார் ஆகியோருடன் இணைந்து 'மெர்லின்' (Merlin) என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். இது ஒரு செயற்கை நுண்ணறிவு (AI) சார்ந்த கூகுள் குரோம் எக்ஸ்டென்ஷன் (Chrome extension) ஆகும். இது பயனர்களின் அன்றாட வேலைத்திறனை மேம்படுத்த ஜெனரேட்டிவ் ஏஐ (Generative AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. தற்போதைய நிலவரப்படி, இந்த ஸ்டார்ட்அப் நிறுவனம் மிக வேகமாக வளர்ந்து, சுமார் 50 மில்லியன் டாலர் (சுமார் ₹415 கோடிக்கும் மேல்) மதிப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் பேட்டி ஒன்றில் சித்தார்த்தா சக்ஸேனாவிடம் "நீங்கள் ஒரு வருடத்தில் சம்பாதித்த மிக அதிகபட்சத் தொகை எவ்வளவு?" எனக் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், "நான் அதைவிடச் சிறந்த ஒன்றைச் சொல்கிறேன். நான் ஒரேநாளில் 8 மில்லியன் டாலர் (சுமார் ₹77 கோடி) சம்பாதித்தேன். அதன்மூலம் ஒரே இரவில் மில்லியனர் ஆனேன்" என்று கூறி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். இந்த வைரல் பேட்டி, இணையத்தில் வைரலாகி வருவதுடன், இளம் தலைமுறையினரின் பேசுபொருளாகவும் மாறியுள்ளார்.