பாஜக, ஆர்எஸ்எஸ், பஜ்ரங்தள் ஆகிய அமைப்புகளும் தீவிரவாத இயக்கங்கள்தான் என்று கர்நாடக முதல்வர் சித்தராமைய்யா கூறியுள்ளார்.
கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகருக்கு இன்று அம்மாநில முதல்வர் சித்தராமைய்யா சென்றார். அங்கு செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்தார். பாஜக பிரமுகர் தீபக் ராவ் கொலை வழக்கில் தொடர்புடையதாக குற்றம்சாட்டப்படும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா இயக்கத்தை கர்நாடக அரசு இன்னும் ஏன் தடை செய்யவில்லை? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த சித்தராமைய்யா, பாஜக பிரமுகர் தீபக் ராவ் கொலை வழக்கு தொடர்பாக மேலும் சில உண்மையான தகவல்களுக்காக காத்திருக்கிறோம். பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா, ஆர்எஸ்எஸ், பஜ்ரங்தள், விஸ்வ ஹிந்து பரிஷத் போன்ற எந்த அமைப்பாக இருந்தாலும் சமூக அமைதியை குலைப்பவர்களை சகித்துக்கொள்ள முடியாது.
பாஜக, ஆர்எஸ்எஸ், பஜ்ரங்தள் ஆகிய அமைப்புகளும் தீவிரவாத இயக்கங்கள்தான். பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா மட்டுமல்ல ஆர்எஸ்எஸ் மற்றும் பஜ்ரங்தள் ஆகிய இயக்கங்கள் உள்ளிட்ட தீவிரவாத செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் இந்த அரசு விட்டு வைக்காது என்று அவர் கூறினார்.