இந்தியா

சபரிமலை விவகாரம்: பாஜக ஆர்ப்பாட்டத்திற்கு முன்பாக ஒருவர் தீக்குளிப்பு

சபரிமலை விவகாரம்: பாஜக ஆர்ப்பாட்டத்திற்கு முன்பாக ஒருவர் தீக்குளிப்பு

Rasus

சபரிமலை கோயில் வளாகத்தில் விதிக்கப்பட்டுள்ள பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு எதிராக பாஜக சார்பில் போராட்டம் நடைபெற்றது. போராட்டம் நடைபெற்ற இடம் அருகே ‘ஐயப்பா ஐயப்பா” எனக் கூச்சலிட்ட ஒருவர் உடலில் தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார்.

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் எனக் கடந்த சில மாதங்களுக்கு முன் உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது. உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்புக்கு வரவேற்பும், எதிர்ப்பும் ஒருசேர எழுந்தன. சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கக் கூடாது என கேரளாவில் தொடர் போராட்டங்கள் நடைபெற்றன.

இதனிடையே சபரிமலைக்குச் செல்ல முயன்ற பெண்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். எனவே கோயிலில் அசம்பாவிதங்களை தவிர்க்கும் பொருட்டு பல்வேறு கட்டுப்பாடுகளை கேரள போலீசார் விதித்துள்ளனர். இதற்கு சபரிமலை செல்லும் பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சபரிமலை கோயில் வளாகத்திலும் கூட கடுமையான கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சபரிமலை கோயில் வளாகத்தில் விதிக்கப்பட்டுள்ள பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு எதிராகவும் ஆளும் கட்சிக்கு எதிராகவும் கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் பாஜக சார்பில் போராட்டம் நடைபெற்றது. இதனிடையே இன்று காலை 2 மணி அளவில் போராட்டக்காரர்கள் தங்கியிருந்த கூடாரத்தின் முன்பாக இளைஞர் ஒருவர் உடலில் தீவைத்துக் கொண்டு கூடாரத்தை நோக்கி ஓடிவந்தார். அப்போது அவர் ‘ஐயப்பா ஐயப்பா’ எனக் கூச்சலிட்டார்.

இதனையடுத்து அங்கிருந்தவர்கள் அவரின் உடலில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். அதன் பின் திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், இன்று மாலை 3.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 90 சதவீதம் தீக் காயங்களுடன் அவரை கொண்டு வந்ததால் அவரை காப்பாற்ற முடியவில்லை என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். உயிரிழந்தவர் வேணுகோபாலன் நாயர் என்பது தெரியவந்துள்ளது. இறப்பதற்கு முன் அவரின் வாக்குமூலத்தை போலீசார் பதிவு செய்துள்ளனர். அதனை நீதிபதி முன் அவர்கள் ஒப்படைக்க உள்ளனர். சபரிமலையில் பெண்கள் அனுமதிக்கு எதிர்ப்பை பதிவு செய்யும் விதமாக அவர் தற்கொலை செய்ததாகவும் கூறப்படுகிறது.