டெல்லியில் வாகன போக்குவரத்து மிகுந்த சாலையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் படுகாயமடைந்தனர். மேற்கு பகுதியில் உள்ள சுபாஷ் நகர் சாலையில் வாகனங்கள் சென்று கொண்டிருந்தபோது, திடீரென அடையாளம் தெரியாத நபர்கள் சிலர், ஒரு வாகனத்தை குறி வைத்து பத்து முறைக்கு மேல் தொடர்ச்சியாக துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.
இதைப் பார்த்த பொதுமக்கள் என்ன நடக்கிறது என புரியாமல், அதிர்ச்சியில் உறைந்தனர். பதறியபடி பாதுகாப்பான இடங்களுக்கு பொதுமக்கள் ஓடிச் சென்றனர். பின்னர் துப்பாக்கிச் சூடு நடத்திய நபர்கள் தப்பிச் சென்றனர். இது தொடர்பான சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.
துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த கேஷோபூர் மண்டியின் முன்னாள் தலைவர் அஜய் சௌத்ரி மற்றும் அவரது சகோதரர் ஜஸ்ஸா சவுத்ரி உள்ளிட்ட 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளில் இருந்து துப்பாக்கிச்சூடு நடத்தியவர்களை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். சம்பவ இடத்தில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.