பொதுவாக கல்யாணம் என்றாலே கொண்டாட்டத்திற்கு பஞ்சமிருககாது. மேளதாளம், நண்பர்களின் டான்ஸ் என களைகட்டும். சில இடங்களில் கல்யாண பெண்ணும், மாப்பிள்ளையும் கூட டான்ஸ் ஆடி திருமணத்தை உற்சாகப்படுத்தி விடுகின்றனர். ஆனால் இங்கு நடந்தது சற்று வித்தியாசமானது. மணப்பெண் சற்று கோபமானவர் போல.. தைரியமானவரும் கூட..
தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக வீடியோ ஒன்று பரவி வருகிறது. வீடியோவில், திருமண கொண்டாட்டத்தில் ஒன்றான மாலை மாற்றுதலுக்கு மணப்பெண்ணும், பையனும் திருமண கோலத்தில் தயாராக இருக்கின்றனர். பொதுவாக மாலை மாற்றும்போது, பையன் தலையை கொஞ்சம் தூக்கியவாறு மாலையை போட விடாமல் மணப்பெண்ணிடம் விளையாட்டுக் காட்டுவார். இங்கும் அப்படித்தான்.
மாப்பிள்ளையின் பின்னால் நின்ற ஒருவர், அவரை அலேக்காக தூக்கினார். இதனால் மணப்பெண்ணால் மாப்பிள்ளைக்கு மாலையை தூக்கி போட முடியவில்லை. அந்த நபரும் மாப்பிள்ளையை இறக்கிவிட்ட பாடில்லை. உடனே அந்த நேரத்தில் மணப்பெண்ணின் பின்னால் இருந்த இளைஞர் ஒருவர், மணப்பெண்ணை தனது இரு கைகளால் அலேக்காக தூக்கி பிடித்து உயர்த்தினார். பின்னர் மணப்பெண் மாப்பிள்ளையின் கழுத்தில் மாலை போட்டார். உடனே கூடியிருந்தவர்களும் சந்தோஷத்தில் அவர்கள் மீது மலர்கள் தூவினர். பின்னர் அந்த நபர் மணப்பெண்ணை இறக்கிவிட்டார்.
இறக்கிவிட்டது தெரிந்ததும் சற்றும் யோசிக்காத மணப்பெண் தன்னை தூக்கி பிடித்தவர் கன்னத்தில் பளார் என்று அறைந்தார். இதனால் அங்கு கூடியிருந்தவர்கள் எல்லோரும் ஒரு நிமிடம் சற்று திகைத்து பார்த்தனர். மாப்பிள்ளையின் நிலைமை இன்னும் பரிதாபம். அவருக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை. தலையை குனிந்தபடி அப்படியே நின்றுவிட்டார். ஆனால் மணப்பெண்ணோ எதுவும் நடக்காதபடி தனது அலங்காரத்தை சரி செய்து கொண்டார். தனது அனுமதி இல்லாமல் அந்த நபர் மணப்பெண்ணை தூக்கியதலாயே, அவர் ஆத்திரத்தில் அடித்ததாக தெரிகிறது. அந்த நேரத்தில் மேடையின் பக்கத்தில் நின்ற மற்றொரு பெண், மணப்பெண்ணிடம் என்ன நடந்தது என கேட்கிறார். அதற்கு மணப்பெண்ணும் அவரிடம் ஏதோ கூறுகிறார். உடனே அடி வாங்கிய அந்த நபர், மணப்பெண்ணின் அருகில் நின்று கேள்வி கேட்கும் அந்த பெண்ணை பளார் என்று கன்னத்தில் அறைந்துவிட்டு விருட்டென சென்றுவிடுகிறார். சந்தோஷமாக முடிவடைய வேண்டிய திருமணம் சண்டையும் சச்சரவுமாக முடிந்தது அனைவருக்கே சற்று அதிர்ச்சி தான். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. டெல்லியில் நடைபெற்ற சம்பவமாக இது கூறப்படுகிறது. எனினும் இது உறுதிப்படுத்தப்படவில்லை.