இந்தியா

விமானத்தை இயக்கும்போது 66% விமானிகள் உறங்குவதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

ச. முத்துகிருஷ்ணன்

நாட்டில் சுமார் 66 விழுக்காடு விமானிகள் விமானத்தை இயக்கும் போது உறங்குவதாக தகவல் வெளியாகி உள்ளது.

அண்மையில் தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று, 542 உள்நாட்டு விமானிகளிடம் ஆய்வு நடத்தியது. இதில் அதிகபட்சமாக 2 மணி நேரம் விமானத்தை ஆட்டோ பைலட் மோடில் வைத்துவிட்டு, விமானிகள் தூங்குவது தெரியவந்துள்ளது. நாட்டில் சுமார் 66 விழுக்காடு விமானிகள் விமானத்தை இயக்கும் போது உறங்குவதாகவும் நாளொன்றுக்கு பத்து முதல் 12 மணி நேரம் வேலை செய்வதே இதற்கு காரணம் என்றும் ஆய்வில் கருத்து தெரிவித்த விமானிகளின் தரப்பில் கூறப்படுகிறது.

சுமார் 54 சதவீத விமானிகள் கடுமையான தூக்கமின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 41 சதவீத விமானிகள் மிதமான தூக்கமின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 6 விமானப் புறப்பாடு திட்டமிடப்படும்போது, அதிகாலை 3 முதல் 3.30 மணிக்குள் எழுந்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுவதாக பெரும்பாலான விமானிகள் பதிலளித்துள்ளனர்.

விமான விபத்துச் சம்பவங்களில் மிக முக்கியக் காரணமாக விமானிகளின் தூக்கம் மற்றும் சோர்வு ஆகியவை சொல்லப்படுகிறது. 2010 ஆம் ஆண்டு 158 உயிர்களை பலி வாங்கிய மங்களூர் விமான விபத்திற்கான முக்கியக் காரணமாகவும் அதுதான் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் 66% விமானிகள் விமானத்தை இயக்கும்போது உறங்கிவிடுவதாக வெளியாகியிருக்கும் ஆய்வு முடிவுகள் அதிர்வலைகளை கிளப்பியுள்ளன.