திருப்பதி ஏழுமலையான் கோயிலில், 2019 முதல் 2024ஆம் ஆண்டு வரை விற்கப்பட்ட 49 கோடி லட்டுகளில், 20 கோடி லட்டுகள் கலப்பட நெய்யால் தயாரிக்கப்பட்டவை என்று, தேவஸ்தானம் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.
உலகப்புகழ்பெற்ற இக்கோயிலில் தரிசனம் செய்வோருக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளை தயாரிக்க, 3 மாதங்களுக்கு ஒருமுறை டெண்டர் விடப்பட்டு, நெய் பெறப்படுகிறது. முந்தைய ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் அவ்வாறு பெறப்பட்ட நெய்யில் கலப்படம் இருந்ததாக புகார் எழுந்தது.
இதுகுறித்த ஆய்வில் கலப்படம் என்பது உறுதியானது. இதுகுறித்து சிபிஐ நடத்திவரும் விசாரணையில், உத்தராகண்டைச் சேர்ந்த 'போலே பாபா' பால் பண்ணை மற்றும் அதைச் சார்ந்த நிறுவனங்கள், 250 கோடி ரூபாய் அளவுக்கு கலப்பட நெய் விநியோகித்தது தெரியவந்தது. இதுகுறித்து திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் முன்னாள் தலைவர் சுப்பரெட்டியிடம் 8 மணி நேரத்துக்கும் மேல் விசாரணை நடத்திய சிபிஐ அதிகாரிகள், அவரது முன்னாள் உதவியாளர் சின்னா உப்பன்னாவை கைது செய்தனர்.